

ஆசிய கோப்பை டி 20 தொடரில் இந்தியா-இலங்கை அணிகள் இன்று மிர்பூரில் மோதுகின்றன. ரோஹித் சர்மா காயத்தால் அவதிப்படுவதால் பார்த்திவ் படேல் கள மிறங்க வாய்ப்புள்ளது. ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ள ஆடுகளத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியாதான் மோதிய இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 52 ரன்னிலும், இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டி வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ளலாம்.
இலங்கை அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேச அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. சமீபத்தில் இந்தியா வுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என இலங்கை அணி இழந்த நிலையில் தற்போது ஆசிய கோப்பையில் மோத உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் அந்த அணியின் கேப்டன் மலிங்கா களமிறங்குவது சந்தேகம் தான். முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர் அடுத்த இரு ஆட்டங்களில் பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லையென துணை கேப்டன் மேத்யூஸ், வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தின் முடிவில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே இந்திய வீரர்களும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். தோனி இன்னும் முதுகு தசைப்பிடிப்பில் இருந்து மீளவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இடது கணுக்காலில் ஏற்பட்ட வீக்கத்தால் ஷிகர் தவண் பங்கேற்கவில்லை. இந்நிலையில் காயமடைந்த வீரர்களின் பட்டியலில் தற்போது ரோஹித் சர்மாவும் இடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அமிர் வீசிய யார்க்கர், ரோஹித்தின் இடது கால் பாதம் பகுதியை பதம் பார்த்தது. முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டது. இதில் எலும்பு முறிவு எதும் ஏற்பட வில்லை என்பது தெரிய வந்துள்ளது. தொடக்க வீரர்கள் இரு வருமே காயம் அடைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறுவார்களா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
இருவரும் களமிறங்காத பட்சத்தில் பார்த்திவ் படேலுக்கு வாய்ப்பு கிடைக்கும். அவர் ரஹானேவுடன் தொடக்க வீரராக விளையாடக்கூடும். ஐபிஎல் தொடரில் பார்த்திவ் படேல் பல்வேறு அணிகளுக்காக தொடக்க வீரராக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக். அணியின் வலுவான வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக நேர்த்தியாக விளையாடி 49 ரன் எடுத்த விராட் கோலியின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. 32 பந்துகளுக்கு 14 ரன்களே எடுத்தாலும் யுவராஜ்சிங்கிற்கு இந்த ஆட்டம் தன்னம்பிக்கையை அதிகரித்தது.
தோனி கடந்த 2 ஆட்டத்திலும் பெரிய அளவிலான ரன்களை எடுக்க வாய்ப்பு கிடைக்காவிட்டா லும், போட்டியை சிறப்பாக முடித்து வைக்கும் அவரது திறன் எந்த சமயத்திலும் அணிக்கு தேவைப்படும். பந்து வீச்சில், 37 வயதான நெஹ்ராவின் உடல் தகுதியும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் அவர் எட்டு டி 20 ஆட்டத்தில் பங்கேற் றுள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் களமிறக் கப்பட வாய்ப்புகள் உள்ளது. இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா தங்களது சிறந்த பங்களிப்பால் அணிக்கு பலம் சேர்த்து வருகின்றனர்.
சுழலில் அஸ்வின், ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு வருதால் ஹர்பஜன் சிங், பவன் நேகி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது தான்.
இலங்கை அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித் தால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பில் சிக்கல் எழும். அந்த அணி 23 ரன்கள் வித்தியாசத் தில் வங்கதேசத்திடம் தோல்வியை சந்தித்துள்ளதால் இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியா:
மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், அஜிங்க்ய ரஹானே, ரவீந்திர ஜடேஜா, பார்த்திவ் படேல், ஹர்திக் பாண்டியா, ஆஷிஷ் நெஹ்ரா, அஷ்வின், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், பவன் நேகி.
இலங்கை:
மலிங்கா (கேப்டன்), தில்ஷான், தினேஷ் சந்திமால், ஷேஹன் ஜெயசூரியா, மேத்யூஸ், சமரா கபுகேதரா, நுவன் குலசேகரா, டஸன் ஷனகா, துஷ்மந்தா ஷமீரா, மிலிந்தா சிறிவர்தனா, ரங்கனா ஹெராத், நிரோஷன் திக்வெல்லா, திஸ்ஷரா பெரேரா, ஜெப்ரி வாண்டர்ஸே, சேனாநாயகே.