Published : 20 Sep 2021 08:11 am

Updated : 20 Sep 2021 08:12 am

 

Published : 20 Sep 2021 08:11 AM
Last Updated : 20 Sep 2021 08:12 AM

திரும்பிவந்துட்டேன்னு சொல்லு: 7 ரன்னுக்கு 3 விக்கெட்; ஆனாலும் சிஎஸ்கேதான்கிங்: வெற்றிக்கு வி்த்திட்ட கெய்க்வாட், பந்துவீச்சாளர்கள்

ruturaj-s-88-and-bowlers-power-csk-to-20-run-win-over-mi
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சிஎஸ்கே அணி | படம் உதவி ட்விட்டர்

துபாய்

ருதுராஜ் கெய்க்வாட்டின் அற்புதமான பேட்டிங், சஹர், பிராவோ ஆகியோரின் நெருக்கடி தரும் பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 30-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. 157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.

முதலிடம்

இந்த வெற்றி மூலம் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் டெல்லி கேபிடல்ஸைவிட அதிகம்பெற்று முதலிடத்தை சிஎஸ்கே பிடித்தது.

எவ்வளவு இடைவெளிவிட்டு ஐபிஎல் நடத்திலும் நாங்கள் திரும்ப வருவோம், கோப்பையை வெல்வோம் என தோனிப் படை வெற்றியுடன் தொடங்கி, சொல்லாமல் சொல்லி இருக்கிறது. கடந்த சீசன்போன்று இல்லை என்று ஒவ்வொரு போட்டியிலும் சிஎஸ்கே அணி கில்லியாக சொல்லி அடித்து வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் டாப்-4 அணிகளில் இடம்பெற்றிருந்தாலும் இதுபாதுகாப்பானது அல்ல. மற்ற 4 அணிகள் பெறும் வெற்றிகள், அடுத்தடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதை பாதிக்கும். ஆதலால், அடுத்துவரும் 4போட்டிகளில் மும்பைக்கு வெற்றி அவசியம்

ஆட்டநாயகன்

58 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்து(4 சிக்ஸர்9பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு கெய்க்வாட் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. கெய்க்வாட்டு எந்த அளவுக்கு முக்கியக் காரணமோ அதேபோல ஜடேஜாவும், பிராவோவும் குறிப்பிட வேண்டியவர்கள். ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி 7 ரன்களுக்கு 3 விக்கெட் என தடுமாறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அவ்வளவுதான்…. என்று வேதனைப்பட வைத்தது.

ஆனால், 5-வது விக்கெட்டுக்கு கெய்க்வாட், ஜடேஜா ஜோடி ஆட்டத்தை வேறு திசைக்கு நகர்த்தினர். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஜடேஜா 26 ரன்களில் வெளியேறினார். கடைசிநேரத்தில் பிராவோ 3 சிக்கர்களை விளாசி 8 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து கவுரமான ஸ்கோரை எட்டவும் காரணமாக அமைந்தார்.

தோனி டிஆர்எஸ்

தோனி ரிவியூ சிஸ்டம் நேற்றும் துல்லியமாகவேலை செய்தது. சஹர் வீசிய பந்தில் டீகாக் கால்காப்பில் வாங்கிய அடுத்த வினாடியோ தோனி டிஆர்எஸ் அப்பீல் செய்தார். மூன்றாவது நடுவர் பார்வையில் டீ காக் கால்காப்பில் வாங்கியது தெளிவானதையடுத்து, தோனி ரிவியூ சிஸ்டம் சரியென நிரூபிக்கப்பட்டது.

இது முன்னேற்றம்.....

சிஎஸ்கே அணியின் முன்னேற்றம் …பவர்ப்ளேயில் 4 வி்க்கெட் இழப்புக்கு 24 ரன்கள், 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள், 20 ஓவர்கள் முடிவில் 6 வி்க்கெட் இழப்புக்கு 156 ரன்கள். கடைசி 10 ஓவர்களில் மட்டும் 112 ரன்கள் சேர்த்தது சிஎஸ்கே அணி.

பவர்ப்ளேயில் 4 விக்கெட்டுகளை இழந்து, மீண்டுவந்து வெற்றி பெறுவது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பெறும் 2-வது வெற்றி இதுவாகும்.

இளைஞர்கள் மீது கேப்டன் தோனி நம்பி்க்கை வைக்கத் தொடங்கியிருப்பதற்கு பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. சிஎஸ்கே எனும் கப்பல் மோசமான இடத்தை நோக்கி பயணப்படுவதை தடுத்து, ஒற்றை ஆளாக மீட்டவர் கெய்க்வாட் என்பதில் துளியும் சந்தேகமில்லை. தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்து அதன்பின் அதிரடியில் இறங்கி ஸ்கோரை வேறு திசைக்கு கொண்டு சென்றார்.

ராகுல் சஹர் வீசிய ஓவரில் கெய்க்வாட் 19 ரன்கள் சேர்த்திருந்தபோது டீகாக் கேட்சை நழுவவி்ட்டார்.அந்த தவறுக்கு மும்பை அணி மிகப்பெரிய விலையை கொடுத்துவிட்டது.

அதிலும் பும்ராவீசிய கடைசி ஓவரில் கெய்க்வாட்டின் ஆட்டம், போல்ட் வீசிய 19-வது ஓவரில் பிராவோ, கெய்க்வாட்டின் சிக்ஸர்கள் அணியின் ஸ்கோரை உயரத்துக்குக் கொண்டு சென்றது. இந்த இரு ஓவர்களில் அடிக்கப்பட்ட ஸ்கோரால்தான் சிஎஸ்கே அணி 156 ரன்களைத் தொட்டது. இல்லாவிட்டால் 125 ரன்களுக்குள் சிஎஸ்கே அணியின் ஆட்டம் முடிந்திருக்கும்.

மிரட்டல் பந்துவீச்சு

156 ரன்கள் என்ற இலக்கு மும்பைக்கு நிர்ணயிக்கப்பட்டபோதே சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது.

புதிய பந்தில் அருமையாக ஸ்விங் செய்யும் தோனியின் செல்லப்பிள்ளைகள் தீபக் சஹர், தாக்கூர் இருவரும் அவரின் நம்பி்க்கையை குலைக்காமல் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து மும்பையை நெருக்கடியில் தள்ளினார். பிாரவோ, ஹேசல்வுட்டும் தங்கள் பங்கிற்கு இசான் கிஷந், பொலார்ட் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த மும்பையின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது.

அதிலும் தீபக் சஹரின் பந்துவீச்சு நேற்று மிரட்டலாக இருந்தது. 4 ஓவர்களை வீசிய சஹர் 19 ரன்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 13 டாட்பந்துகள் அடங்கும், அதாவது ஏறக்குறைய 2 மெய்டன்களை எடுத்தது மாதிரியாகும்.

ஃபார்முக்கு வந்த பிராவோ

கரீபியன் லீக்கில் கடைசி இரு போட்டிகளில் பந்துவீசாவிட்டாலும் இந்த ஆட்டத்தில் பிராவோ ஃபார்முக்கு வந்துவிட்டார். 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 வி்க்கெட்டுகளை வீழ்த்திய பிராவோவின் கணக்கில் 11 டாட்பந்துகளாகும்.

சிஎஸ்கே அணிக்கு எந்த அளவுக்கு பந்துவீச்சில் மும்பை அணி நெருக்கடி அளித்ததோ அதேபோன்ற நெருக்கடியையும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் வழங்கத் தவறவில்லை. 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த மும்பை அணி, 10 ஓவர்களில் 4 வி்க்கெட் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்திருந்தது.

பலவீனம்

மும்பை அணியைப் பொறுத்தவரை முக்கிய தூண்கள் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா இருவரும் இல்லாதது அணிக்கு பெரிய பலவீனம். கடந்த முதல் சுற்றில் இதேபோன்று மும்பை அணி தத்தளித்தபோது பொலார்ட் அற்புதமான இன்னி்ங்ஸை ஆடி 218 ரன்களை சேஸிங் செய்ய வைத்தார்.அதேபோன்ற இன்னிங்ஸ் இருக்கும் என்று எதிர்பார்த்த மும்பை ரசிகர்களுக்கு ஏமாற்றமே இருந்தது.

மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசி கடைசி 5 ஓவர்களில் கோட்டைவிட்டனர். கடைசி 5 ஓவர்களில் நெருக்கடி கொடுத்து பந்துவீசியிருந்தால், 125 ரன்களில் சிஎஸ்கே அணியைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். போல்ட், பும்ரா, குர்னல் பாண்டியா மூவரும் அதிகமான ரன்களைவழங்கினர். ஆடம் மில்னே, ராகுல் சஹர் இருவர் மட்டுமேகட்டுக் கோப்பாகப் பந்துவீசினர்.

விக்கெட் சரிவு

பேட்டிங்கைப் பொறுத்தவரை மும்பைக்கு டீ காக்(17), அன்மோல் ப்ரீத் சிங்(16) நல்லத் தொடக்கம் அளித்தாலும் விரைவாக விக்கெட்டுகள் அடுத்தடுத்து வெளியேறியது அணியின் நம்பிக்கையைக் குலைத்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்(3), இஷான் கிஷன்(11), பொலார்ட்(15) ஆகியோர் ஆட்டமிழந்தபோதே ஏறக்குறைய தோல்வி எழுதப்பட்டுவிட்டது. மும்பை அணி நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 46 டாட் பந்துகளைச் சந்தித்துள்ளனர் ஏறக்குறைய 8 ஓவர்களில் ரன் அடிக்காமல் வீணாக்கியதே தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்து தோல்விக்கு இட்டுச் சென்றது.

மும்பை அணியை வெற்றிக்குஇழுத்துச் செல்ல சவுரவ் திவாரி கடைசிவரை போராடி 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுரவ் திவாரி, பொலார்ட் நல்ல பார்ட்னஷிப் அமைக்க முயன்றபோது ஹேசல்வுட் பந்துவீச்சில் பொலார்ட் கால்காப்பில் வாங்கி வெளியேறியது ஆட்டத்தின் திருப்புமுனை. அதுமட்டுமல்லாமல் குர்னல் பாண்டியா அவசரப்பட்டு ஓடிச்சென்று ரன் அவுட் ஆகியபின் தோல்வி உறுதியானது.

ஆடம் மில்னே (15)நம்பி்க்கை அளித்து வந்த நேரத்தில் பிராவோவின் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார், அதே ஓவரில் ராகுல் சஹரும் டக்அவுட் ஆக மும்பையின் தோல்வி உறுதியானது.


தவறவிடாதீர்!RuturajCSKDwayne BravoRuturaj GaikwadChennai Super KingsMumbai IndiansIPL#iplt20#Dhoni#ipllivescoreCricketnewsSportsnewsசிஎஸ்கே வெற்றிதோனிருதுராஜ் கெய்க்வாட்பிராவோதீபக் சஹர்மும்பை இந்தியன்ஸ்மும்பை தோல்விபொலார்ட்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x