

தெற்காசிய விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு 6 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் குவாஹாட்டி மற்றும் ஷில்லாங் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக் கான 51 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், வங்கதேச வீராங்கனை ஷமினா அக்தரை எதிர்கொண்டார். இப்போட்டியில் மேரி கோம் 40 வினாடிகளிலேயே நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கை வீராங்கனையான அனுஷா கொடிடுவாக்குவை அவர் எதிர்கொள்கிறார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான பூஜா ராணி, 75 கிலோ எடைப்பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் தேவேந்தரோ சிங் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கையின் திவானா ரணசிங்கேவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்திய குத்துச்சண்டை வீரர்களான ஷிவா தாபா, மனோஜ் குமார், விகாஸ் கிருஷ்ணன் ஆகியோரும் தங்கள் எடைப்பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
துப்பாக்கி சுடும் போட்டி
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்திய வீரர் செயின் சிங் நேற்று தங்கப் பதக்கம் வென்றார். இவர் மொத்தம் 453.3 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இப்போட்டியில் 450.3 புள்ளிகளைப் பெற்ற மற்றொரு இந்திய வீரரான ககங் நாரங் வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை வீரர் சமர்கூன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். செயின் சிங் இப்போட்டியில் ஏற்கெனவே 50 மீட்டர் ரைபிள் புரோன் போட்டியிலும், 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரையத்லான்
டிரையத்லானில் நேற்று நடந்த கலப்பு ரிலே போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இதில் பல்லவி, திலீப் குமார், சரோஜினி தேவி, தீரஜ் சாவந்த் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி 1 மணி 24 நிமிடங்கள் 31 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தது. இப்போட்டியில் நேபாள அணி வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. டிரையத்லான் பிரிவில் இந்தியா மொத்தம் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.