Last Updated : 18 Sep, 2021 06:52 PM

 

Published : 18 Sep 2021 06:52 PM
Last Updated : 18 Sep 2021 06:52 PM

நான் விரும்பியதை சாதித்துவிட்டேன்;நீண்டநாள் தொடர விரும்பவில்லை: பதவி விலக விரும்பும் ரவி சாஸ்திரி


நான் விரும்பியதை அனைத்தையும் சாதித்துவிட்டேன், இனிமேலும் நீண்டநாள் பயிற்சியாளராகத் தொடர விரும்பவில்லை என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவி்த்துள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் முடிகிறது. அதற்குபின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே, விவிஎஸ் லட்சுமண் ஆகியோரை நியமிப்பது குறித்து பிசிசிஐ அணுக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டி20 உலகக் கோ்பபைப் போக்கு ரவி சாஸ்திரிக்கு உதவியாகவும், அணியின் மேம்பாட்டுக்காகவும் வழிகாட்டியாக தோனியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தலைமைப்பயிற்சியாளர் ரவி சாஸ்திரி லண்டனில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நான் விரும்பியதை பயிற்சியாளராக இருந்து சாதித்துவிட்டேன் என்று நம்புகிறேன். 5 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக இந்திய அணியை மாற்றிவிட்டேன். ஆஸ்திரேலியா சென்று அந்நாட்டு அணியை 2 முறை தோற்கடித்தோம், இங்கிலாந்தில் வென்றுவிட்டோம்.

மைக்கேல் ஆதர்டனிடம் நான் இந்த கோடைகாலத்தில் பேசுகையில், என்னைப் பொறுத்தவரை ஆஸ்திேரலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது, கரோனா காலத்தில் இங்கிலாந்தை வென்றதைதான் உச்சமாக நினைக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 1-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறோம். லார்ட்ஸ் மற்றும் ஓவல் மைதானத்தில் விளையாடியதை சிறப்பானதாக நினைக்கிறோம் எனத் தெரிவித்தேன்.

இந்த உலகில் ஒவ்வொரு நாட்டு அணியையும் அவர்களின் சொந்தஇடத்தில் வைத்து வெள்ளைப்பந்துப் போட்டியில் தோற்கடித்துள்ளோம். டி20 உலகக் கோப்பையைவென்றால் அது எங்களுக்கு உச்சபட்சமாக அமையும். ஒரு விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன், நம்முடைய மரியாதை குறைவதற்கு முன் நீண்டநாள் பயிற்சியாளராக நீடிக்ககூடாது. நான் விரும்பியதற்கு அதிகமாக சாதித்துவிட்டேன் என நினைக்கிறேன். நான் அதிகமாக அடைந்துவிட்டேன். கடந்த 40 ஆண்டுகால கிரிக்கெட்டில் இது எனக்கு மனநிறைவாக அமைந்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதைக் குறைத்துவிட்டு, அதிகமான லீக்தொடர்களை நடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். கால்பந்தில் இருப்பதுபோல், ப்ரீமியர் லீக், ஸ்பானிஷ் லீக், இத்தாலியன் லீக், ஜெர்மன் லீக் அனைத்தும் சேர்ந்த சாம்பியன் லீக் இருப்பதுபோல் கிரிக்கெட்டிலும் இருக்கவேண்டும்.

தேசிய அணிகள் உலகக் கோப்பை, உள்ளிட்ட முக்கியப் போட்டிகளுக்கு மட்டும் பங்கேற்க வேண்டும். இந்தவாறுதான் டி20 கிரிக்கெட் போட்டி எதிர்காலத்தில் நகர்ந்து செல்ல வேண்டும் என நினைக்கிறேன். டி20 கிரிக்கெட்டை பல்வேறு நாடுகளில் பரப்பலாம், ஒலிம்பிக்போட்டிக்கும் எடுத்துச் செல்லலாம். இரு நாடுகளுக்கு இடையே போட்டி நடத்துவதைக் குறைத்து வீரர்களுக்கு ஓய்வளித்து, அதிகமான டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும்.

என்னுடைய 7 ஆண்டுகால பயிற்சியாளர் வாழ்க்கையில் ஒரு வெள்ளைப்பந்து கிரிக்ெகட் போட்டியின் வெற்றியும் நினைவில் இல்லை. ஆனால், ஆஸ்திேரலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது, இங்கிலந்தில் 2-1 என்ற கணக்கில் முன்னணியில் இருப்பது நினைவில் இருக்கிறது.
இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x