கடைசி நேரத்தில் போட்டி ரத்து; பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம்: மைக்கேல் வான்

கடைசி நேரத்தில் போட்டி ரத்து; பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம்: மைக்கேல் வான்
Updated on
1 min read

கடைசி நேரத்தில் போட்டியை நியூசிலாந்து ரத்து செய்திருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரை பாதுகாப்புக் காரணங்களுக்காக திடீரென ரத்து செய்வதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

ராவல்பிண்டியில் முதல் ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற இருந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நியூஸிலாந்து அரசு எச்சரிக்கை செய்ததையடுத்து தொடர் ரத்து செய்யப்பட்டது.

நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பெரும் சிக்கலில் விட்டுள்ளது.இந்த விவாகரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் வான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ கடைசி நேரத்தில் போட்டியை ரத்து செய்திருப்பது. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அவமானம். பொருளாதார ரீதியாகவும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

விரைவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தீர்க்கப்பட்டு பாகிஸ்தானில் விரைவில் கிரிக்கெட் விளையாடப்படும்” என்றார்.

கடந்த 2002-ம் ஆண்டு கராச்சி நகரில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் வெடிகுண்டு வெடித்ததையடுத்து, அப்போது தொடரை நியூஸிலாந்து அணி ரத்து செய்தது. 2003-ம் ஆண்டு பாகிஸ்தானுக்குப் பயணம் செய்து ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து அணி கடைசியாக விளையாடியது. அதன்பின் கடந்த 18 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு நியூஸிலாந்து அணி பயணம் செய்யவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in