Published : 18 Sep 2021 08:10 AM
Last Updated : 18 Sep 2021 08:10 AM

வாழ்க்கை ஒருவட்டம்: கும்ப்ளே, லட்சுமண் கதவைத் தட்டும் தலைமை பயிற்சியாளர் பதவி வாய்ப்பு

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே | கோப்புப்படம்

புதுடெல்லி


வாழ்க்கை ஒரு வட்டம், மேலே இருப்பவர்கள் கீழே சரிவதும், கீழே இருப்பவர்கள் மேலே உயர்வதும் இயல்பு என்பார்கள், அதுபோல இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் அனில் கும்ப்ளேவை நியமிக்கும் முடிவில் பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பதவிக்கு அனில் கும்ப்ளேக்கு அடுத்த வாய்ப்பாக வி.வி.எஸ். லட்சுமண் பெயரும் ஆலோசிக்கப்படுகிறது.

கடந்த 2016-17ம் ஆண்டில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளாக அனில் கும்ப்ளே இருந்தபோது, கேப்டன் கோலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகினார். பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகுவதற்கு விராட் கோலி பல்வேறு விதத்தில் காரணமாக இருந்தார், அவருடன் மோதலில் ஈடுபட்டார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

சச்சின், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு அப்போது பயிற்சியாளராக கும்ப்ளேவை நியமித்தது. ஆனால், கோலியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த கும்ப்ளே, பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்குப்பின் பதவியிலிருந்து விலகினார். இப்போது பிசிசிஐ தலைவராக கங்குலி இருப்பதால்,மீண்டும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கும்ப்ளே கொண்டுவரப்பட உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கும்ப்ளேயும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு லட்சமணும் பயிற்சியாளராக இருந்து வருகிறார்கள். இருவரையும் பிசிசிஐ தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அணுகும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிசிசிஐ முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில் “ அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியிலிருந்து வெளியேறிய விஷயத்தில் இப்போது திருத்தம் செய்ய வேண்டும். கோலியின் அழுத்தம், நெருக்கடியால்தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகினார் என்பது கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுக்கும் தெரியும். இனிமேல் அது முன்னுதாரணமாக இருக்ககூடாது.

ரவிசாஸ்திரி பதவிக்காலம் டி20உலகக் கோப்பையுடன் முடிந்தபின், தலைமைப்பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லட்சுமண் இருவரில் யார் தயாராக இருக்கிறார்களோ அவரிடம் இருந்து விண்ணப்பிக்க கோரப்படும்” எனத் தெரிவித்தார்

டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபின், டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாகத் தெரிவித்துள்ளதும், மீண்டும் அணிக்குள் கும்ப்ளே பயிற்சியாளராக வருவதற்கான வாய்ப்புக் கதவு திறக்கப்படுவதற்கும் பல்வேறுதொடர்புகளைக் காட்டுகிறது.

பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில் “ இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம், பயிற்சியாளர் அனுபவம் ஆகிய கொண்டதில் கும்ப்ளே, லட்சுமண் ஆகியோர் முதல் வாய்ப்பாக இருக்க முடியும். வெளிநாட்டு பயிற்சியாளர் 2-வது வாய்ப்புதான். கிரிக்கெட்டில் நல்ல டிராக் ரெக்கார்டு இருப்பவர்களும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விக்ரம் ரத்தோர்கூட விருப்பமாக இருந்தாலும், அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடியஅனுபவம் இல்லை, இது தலைைமப்பயிற்சியாளர் பதவி, ஆனால் ரத்தோருக்கு இருக்கும் தகுதிக்கு துணைப்பயிற்சியாளராக இருக்கத்தான் சிறந்தவர்” எனத் தெரிவித்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x