

அஸ்வினின் அபாரப் பந்துவீச்சு துணையுடன் இலங்கைக்கு எதிரான டி20 போட்டித் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
விசாகபட்டிணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 போட்டியில் அஸ்வினின் சுழல் பந்துவீச்சில் சிக்கிய இலங்கை அணி 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி விசாகபட்டிணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய அனுப்பினார்.
ஆட்டத்தின் முதல் ஓவரை வீசவந்த அஸ்வின் 3-வது பந்தில் டிக்வெல்லாவையும் (1 ரன்), 6-வது பந்தில் தில்ஷனையும் (1 ரன்) அவுட் ஆக்கி இலங்கைக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதைத்தொடர்ந்து ஆடவந்த சண்டிமல், நெஹ்ராவின் அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். ஆனால் அவரது அதிரடி நீண்டநேரம் நீடிக்கவில்லை. அஸ்வின் வீசிய அடுத்த ஓவரிலேயே சிக்சர் அடிக்க முயன்ற சண்டிமல் (8 ரன்கள்), ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து குணரத்னேவின் (4 ரன்கள்) விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்த இலங்கை கதிகலங்கியது.
அஸ்வினைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து ஆடலாம் என்று இலங்கை திட்டமிட்ட நேரத்தில் ஸ்ரீவர்த்தனாவின் (4 ரன்கள்) விக்கெட்டை நெஹ்ரா வீழ்த்தினார்.
இதனால் 5 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் என்று இலங்கை தடுமாறியது. இதிலிருந்து அணியை மீட்கும் முயற்சியில் ஷனகாவும், பிரசன்னாவும் ஈடுபட்டனர். ஆனால் அணியின் ஸ்கோர் 48-ஆக இருக்கும்போது பிரசன்னா (9 ரன்கள்) ரன் அவுட் ஆக இலங்கை மீண்டும் படுகுழியில் விழுந்தது.
இந்தச் சரிவில் இருந்து இலங்கை அணியால் மீள முடியவில்லை. ஷனகா (19 ரன்கள்), பெரைரா (12 ரன்கள்) ஆகியோர் மட்டும் இரட்டை இலக்க ரன்களை எட்ட 18 ஓவர்களில் 82 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட் ஆனது. டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை எடுத்துள்ள குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும் இது.
அஸ்வின் 4 விக்கெட்டுகள்
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர் அஸ்வின், 4 ஓவர்களில் 8 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். ரெய்னா 2 விக்கெட்களையும், நெஹ்ரா, பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர், 83 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 84 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 13 ரன்க்ளில் சமீரா பந்துவிச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். தவண் ஆட்டமிழக்காமல் 46 ரன்களையும், ரஹானே 22 ரன்களையும் சேர்த்தனர்.
முடிவில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்தத் தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணியை சுருட்டிய அஸ்வின் ஆட்ட நாயகனாக மட்டுமின்றி, தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.