

ஆசய பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் சீனாவை தோற்கடித்தது.
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம், பிரணோய் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதே வேளையில் இரட்டையர் பிரிவில் இரு ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
ஸ்ரீகாந்த் 21-11, 21-17 என்ற நேர்செட்டில் ஹீவெய் தியானையும், அஜய் ஜெயராம் 22-20, 15-21, 21-18 என்ற கணக்கில் ஹெங்மிங் வாங்கையும், பிரணோய் 21-14, 21-10 என்ற கணக்கில் யுகியூயையும் வீழ்த்தினர். இதில் தரவரிசையில் 25வது இடத்தில் உள்ள ஜெயராம், 11வது இடத்தில் உள்ள ஹெங்மிங் வாங்கை வீழ்த்தியது சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.
இரட்டையர் பிரிவில் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 20-22, 11-21 என்ற நேர்செட்டில் ஜூன்ஹூ லி-ஜிஹன் ஜோடியிடம் தோல்வி கண்டது. மற்றொரு ஆட்டத்தில் பிரணவ் சோப்ரா-அக்ஸய் திவால்கர் ஜோடி 10-21, 18-21 என்ற கணக்கில் யலிவ் வாங்-வென் ஜிஹெங் ஜோடியிடம் தோல்வியை சந்தித்தது.