183 ரன்களில் சுருண்டது நியூஸி. - 100வது டெஸ்டில் ‘மெக்கலம் 0’

183 ரன்களில் சுருண்டது நியூஸி. - 100வது டெஸ்டில் ‘மெக்கலம் 0’
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருண்டது. 100வது டெஸ்டில் களமிறங்கிய கேப்டன் மெக்கலம் ரன் எதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

வெலிங்டனில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 48 ஓவரில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறும் கேப்டன் மெக்கலம் 7 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் எதும் எடுக்காமல் ஹஸல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

மார்ட்டின் கப்தில் 18, டாம் லதாம் 6, வில்லியம்சன் 16, நிகோல்ஸ் 8, வாட்லிங் 17, பிரேஸ்வெல் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். 97 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆண்டர்சன், கிரெய்க் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 40 ரன்னும், கடைசி விக்கெட்டுக்கு கிரெய்க், டிரென்ட் பவுல்ட் ஜோடி 50 ரன்னும் சேர்த்தது. ஆண்டர்சன் 38, பவுல்ட் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். கிரெய்க் 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸி. தரப்பில் ஹஸல்வுட் 4, நாதன் லியான் 3 விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்த ஆஸி. அணி நேற்றைய முதல் ஆட்டம் முடிவில் 40 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. ஜோ பர்ன்ஸ் 0, டேவிட் வார்னர் 5, ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆடம் வோஜஸ் 7, உஸ்மான் ஹாஜா 57 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். நியூஸி. தரப்பில் டிம் சவுதி 2, கிரெய்க் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸி. அணி கைவசம் 7 விக்கெட்டுகள் வைத்துள்ள நிலையில் இன்று 2வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

7வது வீரர்

100வது டெஸ்டில் விளையாடிய மெக்கலம் ரன் எதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 100வது டெஸ்டில் ரன் எதும் எடுக்காமல் ஆட்டமிழந்த வீரர்களில் மெக்கலம் 7வது நபர் ஆவார். இதற்கு முன்னர் திலிப் வெங்சர்கார், ஆலன் பார்டர், வால்ஸ், மார்க் டெய்லர், ஸ்டீபன் பிளமிங், குக் ஆகியோர் தங்களது 100வது டெஸ்டில் ரன் எதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர்.

மெக்கலம் ரன் எதும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இது 14வது முறையாகும். கேப்டனாக 3வது முறை. நியூஸி. கேப்டன்களில் பிளமிங் 13 முறையும், ஹாரி ஹேவ் 4 முறையும் ரன் எதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in