Published : 11 Feb 2016 10:11 AM
Last Updated : 11 Feb 2016 10:11 AM

12-வது தெற்காசிய விளையாட்டு போட்டி: பதக்கப்பட்டியலில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது

குவாஹாட்டி மற்றும் ஷில்லாங் கில் நடைபெற்று வரும் 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி யில் 5வது நாளான நேற்றும் பதக்க பட்டியலில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. இன்னும் 6 நாட்கள் போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்தியா கடந்த முறையை விட அதிக பதக்கங்களை குவித்துள்ளது.

துப்பாக்கி சுடுதலில் இந்தியா வுக்கு 3 தங்க பதக்கம் கிடைத்தது. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அபுர்வி சண்டிலா 10 மீட்டர் ஏர் ரைபிள் மகளிர் பிரில் 209 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். சகநாட்டை சேர்ந்த எலிசபெத் சூசன் வெள்ளி பதக்கமும், பூஜா ஹட்கர் வெண்கலமும் வென்றனர்.

ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஓம் பிரகாஷ் 187.3 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார். 187.6 புள்ளிகளுடன் வங்கதேசத்தின் ஷகில் அகமது தங்க பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஓம்ஹார் சிங், பிரகாஷ் நஞ்ஜப்பா, ஓம் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அணி 1622 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது.

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ் போட்டியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் அந்தோனி அமல் ராஜ், மகளிர் பிரிவில் மனிகா தங்கம் வென்றனர்.

மகளிர் இரட்டையர் பிரிவில் பூஜா சஹஸ்ராபுதே, மனிகா ஜோடி மவுமா தாஸ், ஷானிமி ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்தியன், தேவேஷ் ஹரியா ஜோடி அமல்ராஜ், ஷனில் ஷெட்டி ஜோடியை வீழ்த்தி தங்க பதக்கம் கைப்பற்றியது.

டென்னிஸ்

டென்னிஸில் இந்தியா 3 தங்கம் வென்றது. மகளிர் ஒற்றையர் பிரிவு, ஆடவர் இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு ஆகியவற்றில் இந்தியா முதலிடம் பிடித்தது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், விஜய் பிரசாத் ஜோடி சகநாட்டை சேர்ந்த திவிஜி ஷரண், ஷனம் சிங் ஜோடியை 6-3, 6-4 என்ற நேர்செட்டில் தோற்கடித்தது. இதனால் தங்கம், வெள்ளி பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்தது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா சகநாட்டை சேர்ந்த பிரேர்ணா பாம்ப்ரியை 6-1, 6-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் பிரிவில் அங்கிதா ரெய்னா, திவிஜி ஷரண் ஜோடி சகநாட்டை சேர்ந்த ஷனம் சிங், பிரார்த்தனா தாம்ப்ரே ஜோடியை 6-2, 7-6(3) என்ற கணக்கில் தோற்கடித்தது. வூசூ போட்டியில் இந்தியா நேற்று 8 தங்கம் வென்றது.

நீச்சல்

நீச்சலில் இந்தியாவுக்கு மேலும் 5 தங்க பதக்கங்கள் கிடைத்தது. ஆடவருக்கான 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் வீர்தவால் ஹாடே, 200 மீட்டர் மெட்லி மகளிர் பிரிவில் சாரதா சுதிர், 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் ஜெயோட்ஸ்னா பன்சாரே ஆகியோர் தங்கம் வென்றனர். 4X100 மீட்டர் மெட்லி மகளிர் மற்றும் ஆடவர் பிரிவிலும் இந்தியா தங்க பதக்கம் கைப்பற்றியது.

4X100 மீட்டர் மகளிர் பிரிவில் முதலில் இலங்கை தான் தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த அணி வீராங்கனைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இந்தியாவுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது.

ஆடவருக்கான 200 மீட்டர் மெட்லி பிரிவில் இந்தியாவின் ஷனு தேப்னாத், 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் அன்சூல் கோத்தாரி மற்றும் இதே பிரிவில் மகளிரில் அவந்திகா சவான் ஆகியோர் வெள்ளி வென்றனர். மகளிருக்கான 100 மீட்டர் பிரிஸ்டைல் பிரிவில் இந்தியாவின் ஷிவானி கட்டாரியா வெண்கலம் வென்றார்.

பதக்க பட்டியலில் ஆதிக்கம்

நேற்று மாலை நிலவரப்படி இந்தியா 117 தங்கம், 61 வெள்ளி, 15 வெண்கலத்துடன் மொத்தம் 193 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் தொடர்ந்து முதலிடத் தில் இருந்தது. இலங்கை 23 தங்கம், 46 வெள்ளி, 63 வெண் கலத்துடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் 7 தங்கம், 19 வெள்ளி, 32 வெண்கலத்துடன் மூன்றாவது இடத்திலும் இருந்தன.

2010ல் வங்கதேசத்தில் நடைபெற்ற 11வது தெற்காசிய போட்டியில் இந்தியா 90 தங்கத்துடன் 175 பதக்கங்கள் பெற்று முதலிடம் பிடித்திருந்தது. தற்போது இன்னும் 7 நாட்கள் போட்டி மீதமுள்ள நிலையில் இந்தியா 117 தங்கம், 61 வெள்ளி, 15 வெண்கலத்துடன் 193 பதக்கங்கள் கைப்பற்றியுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x