இதென்னா ஆடுகளமா? 10 போட்டிகளில் விளையாடினால் ஒரு பேட்ஸ்மேனின் வாழ்க்கையே முடிந்துவிடும்: சஹிப் அல் ஹசன் வறுத்தெடுப்பு

வங்கதேச ஆல்ரவுண்டர் சஹிப் அல் ஹசன் | கோப்புப்படம்
வங்கதேச ஆல்ரவுண்டர் சஹிப் அல் ஹசன் | கோப்புப்படம்
Updated on
2 min read

டாக்காவில் உள்ள ஆடுகளங்கள் தரமற்றவை. இந்த ஆடுகளத்தில் 10 முதல் 15 போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் விளையாடினால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிடும் என்று வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் சஹிப் அல் ஹசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், மிக மோசமான டாக்கா ஆடுகளத்தில்தான் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரை வென்றுவிட்டதாக வங்கதேச அணியினர் உச்சி முகர்ந்துகொண்டு, பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால், அந்த அணியின் மூத்த வீரர் சஹிப் அல் ஹசன் அந்த ஆடுகளத்தைப் படுமோசம் என்று விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு ஆஸ்திரேலிய அணி பயணம் செய்து 5 டி20 போட்டிகளில் விளையாடி 4-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்றதாக வங்கதேச வீரர்கள் மார்தட்டினார்கள். ஆனால், எந்தப் போட்டியிலும் இரு அணிகளும் 150 ரன்களைக் கூட எட்டவில்லை. 120 ரன்கள் அடித்தால்கூட அதை சேஸிங் செய்ய 18 ஓவர்கள் வரை எடுத்துக்கொண்டனர்.

நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரையும் வங்கதேச அணி 3-2 என்ற கணக்கில் வென்றது. ஆனால், ஒவ்வொரு போட்டியிலும் இரு அணி பேட்ஸ்மேன்களும் ஸ்கோர் செய்ய கடுமையாகச் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் டாக்காவின் ஆடுகளம் குறித்து வங்கதேச அணியின் மூத்த வீரரும் ஆல்ரவுண்டரான சஹிப் அல் ஹசன் ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகம் புறப்படும் முன்காட்டமாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

“டாக்கா ஆடுகளம் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் 10 முதல் 15 ஆட்டங்களில் ஒரு இளம் பேட்ஸ்மேன் விளையாடினால் அவரின் கிரிக்கெட் எதிர்காலமே முடிந்துவிடும்.

இந்த மைதானத்தில் கடைசியாக விளையாடிய 9 முதல் 10 போட்டிகளில் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஃபார்ம் இல்லாமல் தவிக்கிறார்கள். இதிலிருந்து ஆடுகளம் எவ்வளவு மோசமானது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். எந்த பேட்ஸ்மேனும் இந்த ஆடுகளத்தில் ரன் சேர்க்க முடியவில்லை.

இந்த ஆடுகளத்தில் ஆடியதை எல்லாம் பேட்ஸ்மேன்கள் கணக்கில் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன். எந்த பேட்ஸ்மனும் டாக்காவில் உள்ள ஆடுகளத்தில் 15 போட்டிகள் விளையாடினால் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிடும்.

உலகக்கோப்பை போட்டிக்காக வங்கதேச அணியினர் சிறப்பாகத் தயாராகியுள்ளனர். டாக்கா ஆடுகளம் குறித்தும், குறைவாக ஸ்கோர் செய்தது குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் வெற்றி பெறுவதைத் தவிர சிறந்தது ஏதுமில்லை. வெற்றி பெறும்போது நம்பிக்கை வேறு விதமாக உயரும். நீ்ங்கள் சரியாக விளையாடாவிட்டால் தோல்வி அடைவீர்கள். இந்த உலகக் கோப்பை போட்டியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இருக்கிறோம்.

ஐபிஎல் போட்டியில் நான் விளையாடும் ஆடுகளம் பற்றி அறிந்து கொள்வது எங்கள் ஒவ்வொருவருக்கும் உதவும். என்னுடைய அனுபவத்தையும் அணி வீரர்களிடம் பகிர்ந்து கொள்வேன். மற்ற வீரர்களின் மனநிலையையும் புரிந்து கொண்டு, அவர்கள் உலகக் கோப்பையைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அறியமுடியும். உலகக் கோப்பை தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நாங்கள் சென்றுவிடுவோம், அந்தக் காலநிலையோடு இணைந்து கொள்ள இந்த அவகாசம் போதுமானதாக இருக்கும்''.

இவ்வாறு சஹிப் அல் ஹசன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in