

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்களைக் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா பிரதான அணியில் சேர்க்கப்படாமல் ரிசர்வ் வீரர்கள் பட்டியிலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தத் தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகின்றன.
இதில் இலங்கை அணி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட அணியை இன்று அறிவித்துள்ளது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணி நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்குள் செல்லாமல் தகுதிச்சுற்று அடிப்படையில் செல்கிறது.
தகுதிச்சுற்றில் குரூப்-ஏ பிரிவில் நபியா, நெதர்லாந்து, அயர்லாந்து அணிகளுடன் இலங்கை இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.
உலகக்கோப்பையில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு கேப்டனாக தசுன் சனகா நியமிக்கப்பட்டுள்ளார். தனஞ்சயா டி சில்வா, குஷால் பெரேரா, 21வயதான இளம் ஆஃப் ஸ்பின்னர் மகேஷ் தீக்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மகேஷ் சிறப்பாக பந்துவீசியதால் உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தவிர வனிந்து ஹசரங்கா, துஷ்மந்த சமீரா, தினேஷ் சந்திமால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி தோற்றாலும், டி20 தொடரை வென்றது. இந்தத் தொடரில் ஹசரங்கா சிறப்பாகப் பந்துவீசினார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி அணியில் ஹசரங்கா,சமீரா இருவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக இலங்கை வீரர்கள் இருவருக்கும் சிறந்த பயிற்சிக்களமாக அமையும். இது தவிர லஹிரு குமாரா, புலினா தாரங்கா, பினுரா பெர்னான்டோ, அகிலா தனஞ்செயா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கை அணி விவரம்:
தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்சயா டி சில்வா(துணைக் கேப்டன்), அவிஷ்கா பெர்னான்டோ, சாரித் அசலங்கா, பனுகா ராஜபக்ச, கமிந்து மென்டிஸ், குஷால் பெரேரா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, லஹிரு மதுசங்கா, துஷ்மந்தா சமீரா, நுவான் பிரதீப், மகேஷ் தீக்சனா, பிரவீன் ஜெயவிக்ரமா.
ரிசர்வ் வீரர்கள்: லஹிரு குமாரா, புலினா தாரங்கா, பினுரா பெர்னான்டோ, அகிலா தனஞ்சயா.