

பயிற்சியாளர் ராகுல் திராவிடின் வழிகாட்டுதலுடன் இந்திய அண்டர் 19 அணி வங்கதேசத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிக்குள் பிரவேசித்துள்ளது. இந்நிலையில் ராகுல் திராவிட் வீரர்களுடனான தனது அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார்.
ஐசிசி கிரிக்கெட் இணையதளத்துக்கு அவர் அளித்த வீடியோ நேர்காணலில் கூறியிருப்பதாவது:
நான் இளம் வீர்ர்களுடன் பணியாற்றுவதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன், இளம் வீரர்களுடன் உரையாடி வருகிறேன். எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
அணிக்கான நல்ல சூழலை அமைத்துக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். வீரர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்குகிறேன்.
ரிலாக்ஸான ஒரு ஓய்வறைச் சூழலை ஏற்படுத்தியுள்ளோம். வீரர்களிடமிருந்து மன அழுத்தம், சூழலின் அழுத்தம் ஆகியவற்றை முடிந்த அளவுக்கு அகற்றி வருகிறேன், ஒவ்வொருவரும் தங்கள் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளேன்.
இளம் வீரர்கள் இந்தக் கட்டத்தில் தங்களை எப்படி தயார் படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பார்ப்பதில் உற்சாகமாக இருக்கிறது, ஏனெனில் நானுமே அந்த நிலையைக் கடந்தே வந்துள்ளேன், ஆனால் இப்போதைய வீரர்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிவதில், அறிவுரைகள் வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
இந்தக் காலக்கட்டம் இளம் வீரர்களுக்குச் சவாலானது, இன்னும் எதிர்காலத்தில் நிறைய சாத்தியங்கள் அவர்களுக்காக காத்திருக்கின்றன. எதிர்காலத்தை குறித்து அவர்களுக்கு கவலையும் அச்சமும் இருக்கும். இது அவர்கள் கற்றுக்கொள்ளும் காலமே. இதிலிருந்து பயணித்து முதல் தர கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் என்று அவர்கள் முன்னேற வேண்டும். ஒரு வீரராகவும், ஒரு மனிதராகவும் அவர்கள் தங்களை சரியாக நடத்திக் கொள்வதற்கு இது நல்ல வாய்ப்பு.
இவர்களில் பலர் தவறுகள் செய்யக்கூடும், ஆனால் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள் என்றால் தவறுகள் செய்வதில் தவறில்லை. பாடம் கற்றுக் கொள்வதற்கான சூழலை அமைத்துக் கொடுக்கிறோம், மேலும் அவர்கள் தவறுகள் செய்யவும் வாய்ப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் நிறைய போட்டிகளில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் போது தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கும்.
தயாரிப்புகளில் ஒருவர் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். தயாரிப்புகள் மிக முக்கியம், இதுதான் களத்துக்கும் உள்ளேயும் வெளியேயும் தங்களை அவர்கள் வழிநடத்திச் செல்ல உதவும்.
பயிற்சியாளராக நான் அவர்களுக்குக் கூறுவதெல்லாம் முடிவுகள் எடுப்பதில் உறுதிப்பாடு தேவை, ஏனெனில் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்குமான விளைவுகள் உள்ளன. எடுக்கும் முடிவுகள் அவர்களை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகவும், நல்ல மனிதராகவும் மாற்ற வேண்டும்.
இவ்வாறு கூறினார் ராகுல் திராவிட்.