

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா, தனது பெற்றோரை விமானத்தில் அழைத்துச் சென்று தனது கனவை நனவாக்கியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்திருந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம்வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். இந்நிலையில், 23 வயதானநீரஜ் சோப்ரா தனது பெற்றோரை முதன்முறையாக விமானத்தில் அழைத்துச் செல்லும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். அதில், “எனது பெற்றோரை முதன்முறையாக விமானத்தில் அழைத்துச் செல்ல முடிந்ததால் என்னுடைய சிறிய கனவு நனவானது” எனத் தெரிவித்துள்ளார்.
நீரஜ் சோப்ராவின் இந்த பதிவு வைரலாகி உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா உடற்சோர்வு காரணமாக இந்த ஆண்டில் நடைபெற உள்ள மற்ற போட்டிகளில் கலந்துகொள்ளப் போவது இல்லை என ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதேவேளையில் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு ஆகியவற்றில் வலுவுடன் திரும்பி வந்து கலந்து கொள்வேன் என்றும் உறுதியாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.