Last Updated : 11 Sep, 2021 05:30 PM

 

Published : 11 Sep 2021 05:30 PM
Last Updated : 11 Sep 2021 05:30 PM

ஐபிஎல் 2021; இங்கிலாந்தில் இருந்து ஒவ்வொரு வீரருக்கும் 6 நாட்கள் தனிமை: பிசிசிஐ கிடுக்கிப்பிடி

இங்கிலாந்தில் இருந்து ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் வரும் ஒவ்வொரு வீரரும், பயோ-பபுள் சூழலுக்குள் செல்லும் முன் 6 நாட்கள் கட்டாயத் தனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

ஐபிஎல் டி20 தொடரின் 2-வது பகுதி வரும் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கள் அணிகளுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நடக்க இருந்த கடைசி டெஸ்ட் போட்டி கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அணியின் பிசியோவுக்கும் தொற்று உறுதியானது.

இதையடுத்து, மான்செஸ்டரில் நடக்க இருந்த 5-வது டெஸ்ட் போட்டி காலவரையின்றி ரத்து செய்யப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டி பின்னர் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் தங்கள் வீரர்களை விமானம் மூலம் அழைத்துவர அணி நிர்வாகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. சில அணிகள் தனி விமானங்களை அனுப்பி வீரர்களை அழைத்துவரும் முயற்சியில் இருக்கின்றன.

இந்தச் சூழலில் இங்கிலாந்திலிருந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்க வரும் வீரர்கள் ஒவ்வொருவரும் 6 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற கிடுக்கிப்பிடி உத்தரவை பிசிசிஐ பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து ஒரு அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இங்கிலாந்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவரும் ஒவ்வொரு வீரரும் 6 நாட்கள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும்.

அதன் பின்புதான் அணியின் பயோ-பபுள் சூழலுக்குள் செல்ல முடியும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்திலிருந்து பயோ-பபுள் முறையில் இருக்கும் வீரர்களை அப்படியே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும் திட்டம் ஏதும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரை துபாய் அழைத்துச் செல்ல நாளை தனி விமானம் அனுப்புகிறது.

இதுகுறித்து ஆர்சிபி அணி வட்டாரங்கள் கூறுகையில், “கேப்டன் கோலி, சிராஜ் ஆகியோரை அழைத்துச் செல்ல தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த விமானம் லண்டன் நேரப்படி சனிக்கிழமை இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு, துபாயை ஞாயிறு அதிகாலை வந்து சேரும். பாதுகாப்பாக வீரர்களை மாற்றுவதுதான் முதல் முக்கியத்துவம். அணியின் பயோ-பபுள் சூழலுக்குள் செல்லும் முன் இருவரும் 6 நாட்கள் கட்டாயத் தனிமையில் இருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே சிஎஸ்கே அணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், சத்தீஸ்வர் புஜாரா ஆகியோர் நாளை துபாய் வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x