

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்லத் தனி விமானம் கிடைக்காத காரணத்தால் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு துபாய் சென்றனர்.
ஜஸ்பிரித் பும்ரா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் பயணிகள் விமானத்தில் நேற்று மான்செஸ்டர் நகரிலிருந்து துபாய் புறப்பட்டுச் சென்றனர்.
இது தவிர சிஎஸ்கே வீரர்கள், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ஷர்துல் தாக்கூர், மொயின் அலி, சாம் கரன் ஆகியோரும் பயணிகள் விமானத்தில்தான் செல்கின்றனர்.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இப்போதுள்ள சூழலில் பிசிசிஐ சார்பில் எந்த அணியினருக்கும் தனி விமானம் ஏற்பாடு செய்யவில்லை. ஆதலால், ஒவ்வொரு அணி நிர்வாகமும் தேவைப்பட்டால் தனி விமானத்தை ஏற்பாடு செய்யலாம். ஒருவேளை வீரர்கள் சாதாரணப் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தால், ஐக்கிய அரபு அமீரகம் சென்று 6 நாட்கள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடக்கும் 5-வது டெஸ்ட் முடிந்தபின், இரு அணி வீரர்களில் ஐபிஎல் தொடரில் பங்கேற்போர் மட்டும் தனித்தனி விமானத்தில் பயோ-பபுள் சூழல் விலகாமல் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, உடற்பயிற்சி நிபுணர் ஆகியோர் கரோனாவில் பாதிக்கப்பட்டதால், 5-வது டெஸ்ட் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் தனித்தனி விமானத்தில் புறப்பட்டுச் செல்கின்றனர்.
சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், “ஒவ்வொரு அணி வீரருக்கும் தனியாக விமானத்தை ஏற்பாடு செய்வது சாத்தியமற்றதாக இருந்தது. ஆதலால் பயணிகள் வர்த்தக விமானத்தில் டிக்கெட் பெற்று வீரர்களை அனுப்பி வைக்கிறோம். ஆனால், அவ்வாறு செல்லும் வீரர்கள் கட்டாயம் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், முகமது ஷமி, டேவிட் மலான் ஆகியோர் மான்செஸ்டர் நகரில் உள்ளனர். இவர்களுக்கும் தனி விமானம் கிடைக்கவில்லை என்பதால் பயணிகள் விமானத்தில் புறப்படுகின்றனர்.
பஞ்சாப் கிங்ஸ் சிஇஓ சதீஸ் மேனன் கூறுகையில், “மான்செஸ்டர் நகரிலிருந்து எங்கள் அணி வீரர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) துபாய் புறப்படுகிறார்கள். துபாய் சென்றபின் 6 நாட்கள் கட்டாயத் தனிமையில் வைக்கப்படுவார்கள்’’ எனத் தெரிவித்தார்.