

தென் ஆப்பிரிக்கா மகளிர் ஹாக்கி அணிக்கு எதிரான 2வது ஆட்டத்தை இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடித்தது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரு கிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் கேப்டவுனில் நேற்று இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது.
தென் ஆப்பிரிக்காவின் மராயிஸ் 3வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது. 24வது நிமிடத்தில் இந்தியா இதற்கு பதிலடி கொடுத்தது. பெனால்டி கார்னரை குர்ஜித் கோலாக மாற்றினார். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் இந்தியா 2வது கோலை அடித்தது.
இம்முறை கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை தீப் கிரேஸ் கோலாக்கினார். இதனால் இந்தியா முதல் பாதியில் 2-1 என முன்னிலை வகித்தது. 34வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் திர்கி ஷாம்பெர்லின் கோல் அடிக்க ஆட்டம் 2-2 என சமநிலையை அடைந்தது. அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டன. முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.