

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்குப்பின் ரவிச்சந்திர அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்தது குறித்து தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிவரை பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கின்றன. இதற்கான 15பேர் கொண்ட இந்திய அணியை அனைத்து இந்திய சீனியர் தேர்வுக்குழு நேற்று அறிவித்தது.
இதில் 4 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் அணிக்குள் வந்துள்ளார். இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக அஸ்வின் விளையாடினார் அதன்பின் உலகக் கோப்பைப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
ரவிச்சந்திர அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதுகுறித்து தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஐபிஎல் டி20 தொடரில் அஸ்வின் தொடர்ந்து விளையாடி வருகிறார், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார். உலகக் கோப்பைத் தொடருக்கு நாம் செல்லும்போது இந்திய அணியில் ஆஃப் ஸ்பின்னர் தேவை. ஐக்கிய அரபு அமீரகத்தி்ல் ஐபிஎல் தொடர் நடந்தபோது, அங்கிருக்கும் ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்று தெரிவித்துள்ளார்கள்.அதிலும் குறிப்பாக ஆஃப் ஸ்பின்னர்கள் அவசியம் என்பதையும், அவர்களுக்கு அதிகமான ஆடுகளம் ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்தனர்.
வாஷிங்டன் சுந்தர் காயத்தால் இடம் பெறவில்லை. அஸ்வின் இந்திய அணியின் சொத்து. இந்திய அணிக்கு அனுபவமான வீரர் ஒருவர் தேவை. இ்ந்திய அணியில் ஸ்பெசலிஸ்ட் ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் மட்டும்தான். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிவருவதால், உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.
துபாய் மைதானம் மிகப்பெரியது. அஸ்வின் ஒருவர் மட்டுமே அனைத்து அணிகளுக்கும் தொந்தரவு அளிக்கக் கூடிய அளவில் பவர்ப்ளேயில் பந்துவீசக் கூடியவர்.
அஸ்வின் தேவை என்பதை இத்தனை ஆண்டுகளாக கேப்டன் கோலி நம்பியிருக்கமாட்டார், ஆனால், அணியில் உள்ள மற்ற முக்கிய வீரர்கள் அஸ்வின் அணிக்குத் தேவை என்பதை உறுதியாக நம்புகிறார்கள். அஸ்வினை அணியில் சேர்த்தது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு, ஆதலால் அதில் கேப்டன் கோலியும் இசைவு தெரிவிக்க வேண்டியிருந்தது.
ஐபிஎல் டி20 தொடர் மிகப்பெரிய போட்டி உலகளவில் தரமான வீரர்கள் இதில் பங்கேற்கிறார்கள். ஆதலால், ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் சிறப்பாக விளையாடினாலே அவர் எவ்வாறு திறமையாக விளையாடுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும். வீரர்கள் யாரேனும் காயமடைந்தால் அவர்களுக்கு மாற்றாக காத்திருப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரேயாஸ் அய்யர் நீண்டகாலமாக கிரிக்கெட் விளையாடவில்லை. ஆதலால் அவரை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளோம். ஐபிஎல் தொடரில் அவர் மீண்டும் விளையாடுவார், அவர் உடல் தகுதியும் கவனிக்கப்படும்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, இஷான் கிஷன் என 3 தொடக்க ஆட்டக்கார்கள் உள்ளனர். இதில் இஷான் கிஷன் தொடக்க வீரராகவும், நடுவரிசையிலும் விளையாடக் கூடியவர். எந்த இடத்துக்கும் ஆடுவதற்கு இஷான் ஏற்றவர். சுழற்பந்துவீச்சை சிறப்பாகக் கையாளுவார் என்பதால், நடுவரிசையில் நன்றாக ஆடுவர். டி20 போட்டிகளில் நடுவரிசையில் சிறப்பாக ஆடக்கூடிய ரெக்கார்டு கோலிக்கு உண்டு. ஆதலால், சூழலைப் பொறுத்து அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவாரா என்பது முடிவு செய்யப்படும்.
அணியில் வித்தியாசமான வீரர்கள், பந்துவீச்சாளர்கள் இருக்குமாறு அணியைத் தேர்வு செய்ய வேண்டும் என தேர்வாளர்களுக்கு ஆசைதான். ஆனால், ஐக்கிய அரபு ஐமீரகத்தில் மைதானம் மிகவும் மெதுவானவை. அதனால்தான் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே எடுத்தோம், ஹர்திக் பாண்டியா கூடுதலாக அணியில் உள்ளார். இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தேவைப்பட்டிருந்தாலும்கூட, ஆடுகளத்தின் தன்மையின் அடிப்படையில் அவர்களை அணியில் சேர்க்க முடியாத நிலைதான் இருக்கும்.
இவ்வாறு சேத்தன் ஷர்மா தெரிவித்தார்.