என்னை நடத்திய விதம் எதிர்கால வீரர்களுக்கான மோசமான அறிகுறி: சந்தர்பால் வருத்தம்

என்னை நடத்திய விதம் எதிர்கால வீரர்களுக்கான மோசமான அறிகுறி: சந்தர்பால் வருத்தம்
Updated on
1 min read

மேற்கிந்திய தீவுகள் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ஷிவ்நரைன் சந்தர்பால், தான் ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

தன்னை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் நடத்திய விதம் எதிர்கால கிரிக்கெட் வீர்ர்களுக்கு கவலையளிக்கும் அறிகுறியாகும் என்றார் சந்தர்பால்.

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஆட தடையில்லாச் சான்றிதழ் வழங்க மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் தன்னை ஓய்வு பெற்றேயாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக அவர் வருந்தியுள்ளார்.

இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போவுக்கு சந்தர்பால் கூறியதாவது:

"ஜனவரி 23-ம் தேதி நான் ஓய்வு பெற வேண்டும் என்ற பிரிவுடன் எனக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கியுள்ளனர். நான் ஓய்வு அறிவிக்கவில்லையெனில் தடையில்லாச் சான்றிதழ் எனக்கு கிடைத்திருக்காது.

ஓய்வு பெறுவதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக ஒருமுறை ஆட விரும்பினேன். ஆனால் இனி அதைப் பேசிப் பயனில்லை.

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீகில் ஆட எனக்கு ஓய்வு பெற்ற பிறகுதான் தடையில்லாச் சான்றிதழ் அளிக்கப்பட்டது. இத்தனையாண்டு காலம் மேற்கிந்திய கிரிக்கெட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த என்னை இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தியிருக்கலாம். என்னை போன்ற ஒருவருக்கே இந்த கதி என்றால் இளம் கிரிக்கெட் வீரர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

வீரர்களை சாதாரணப் பள்ளிச் சிறுவர்களைப் போல் நடத்துகின்றனர். அப்படித்தான் எப்போதும் வீர்ர்களை நடத்துகின்றனர். நிலைமை இப்படியிருக்கும் போது இவ்வாறான சீர்கேடுகள் ஏற்படவே செய்யும்" என்றார் சந்தர்பால்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,867 ரன்களை 51 என்ற சராசரியின் கீழ் சந்தர்பால் எடுத்துள்ளார். 164 டெஸ்ட் போட்டிகளில் 30 கடினமான சதங்களை அவர் எடுத்துள்ளார். லாரா 11,953 ரன்கள் எடுத்து மேற்கிந்திய டெஸ்ட் வீரர்களில் முதலிடம் வகிக்கிறார் என்றால் சந்தர்பால் 2-ம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in