Published : 09 Feb 2016 04:12 PM
Last Updated : 09 Feb 2016 04:12 PM

அண்டர் 19 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

வங்கதேசத்தில் நடைபெறும் அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இதோடு அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிக்கு 5-வது முறையாக இந்திய அணி நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திராவிட் பயிற்சியாளராக உள்ள இந்திய அண்டர் 19 அணி உலகக்கோப்பை இறுதிக்குள் நுழைந்தது. அதுவும் தோற்காத அணியாக இதுவரை இருந்து வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் அசலங்கா இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைக்க, இந்திய அண்டர் 19 அணி 27/2 என்ற நிலையிலிருந்து மீண்டு 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 42.4 ஓவர்களில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்துள்ளது.

இதனையடுத்து நாளை மறுநாள், அதாவது பிப்ரவரி 11-ம் தேதி மோதும் மே.இ.தீவுகள், வங்கதேச அணிகளுக்கு இடையிலான மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெறும் அணியை இந்திய அணி இறுதிப் போட்டியில் பிப்ரவரி 14-ம் தேதி ஞாயிறன்று மோதுகிறது.

அன்மோல்பிரீத் சிங், சர்பராஸ் கான் அபாரம்:

இந்திய அணி முதலில் பேட் செய்த போது, ரிஷப் பண்ட் (14), கேப்டன் இஷான் கிஷன் (7) ஆகியோர் சடுதியில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து 9.2 ஓவர்களில் 27/2 என்று இந்திய அணி சற்றே தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ன்ஹ்ட அன்மோல்பிரீத் சிங் (72), சர்பராஸ் கான் (59) இணைந்து 21 ஓவர்களில் 3-வது விக்கெட்டுக்காக 96 ரன்களைச் சேர்த்து மீட்டனர். ரன் எடுப்பது மிகவும் கடினமாக அமைந்ததால் 15 ஓவர்களில் 44/2 என்றுதான் இருந்தது. இந்நிலையில் 19-வது ஓவரில் சர்பாராஸ் கான், 2 பவுண்டரிகளை அடித்தார். ஆட்டத்தின் 28-வது ஓவரில்தான் முதல் சிக்ஸ் வந்தது. சர்பாராஸ் கான், சில்வாவின் பந்தை மேலேறி வந்து லாங் ஆஃப் மீது சிக்ஸ் அடித்தார். 61 பந்துகளில் அரைசதம் கண்டார் சர்பராஸ் கான்.

ஸ்கோர் 123-ஆக இருந்த போது சர்பராஸ் கான், 71 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து புல் ஷாட்டில் பெர்னாண்டோ பந்தில் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிறகு அன்மோல்பிரீத் சிங், அசலங்கா பந்து ஒன்றை மேலேறி வந்து லாங் ஆனில் சிக்ஸ் அடித்து பிறகு ஒரு பவுண்டரி 69 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கண்டார்.

40-வது ஓவரில் இந்திய அணி 173/3 என்று இருந்தது. 43-வது ஓவரின் முதல் பந்தில் 92 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸ் அடித்த அன்மோல்பிரீத் சிங் 72 ரன்களில் நடுவரின் தவறான தீர்ப்புக்கு நிமேஷ் பந்தில் திருப்தியில்லாமல் வெளியேறினார்.

வாஷிங்டன் சுந்தரும், அன்மோல்பிரீத் சிங்கும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 12 ஓவர்களில் 70 ரன்களைச் சேர்த்தனர். வாஷிங்டன் சுந்தர் 45 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஸ்கோர் 218ஆக இருக்கும் போது ஆட்டமிழந்தார்.

ஆனால் அர்மான் ஜாஃபர் இறங்கி அதிரடி காட்டினார், அவர் 16 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 29 ரன்கள் விளாசியது மிக முக்கியமான பங்களிப்பாக அமைந்தது. குறிப்பாக ஒரு 11 பந்துகளில் 23 ரன்கள் அப்போது வந்தது. லோமோர் 11 ரன்களையும், தாகர் 17 ரன்களையும் எடுத்து பங்களிக்க இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குமாரா, நிமேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அவேஷ் கானின் அபார தொடக்கப் பந்து வீச்சு:

இலக்கைத் துரத்த களமிறங்கிய இலங்கை அணி வலது கை வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானின் கட்டுக்கோப்பான லெந்த் மற்றும் 135 கிமீ வேகம் ஆகியவற்றால் திணறினர். முதல் ஓவரின் கடைசி பந்து அருமையான இன்ஸ்விங்கராக அமைய தொடக்க வீரர் பெர்னாண்டோ 4 ரன்களில் எல்.பி. ஆனார். இதே ஓவரில் ஒரு பிளம்ப் எல்.பி. நடுவரால் தவறாக மறுக்கப்பட்டது, ஆனால் அதே ஓவரில் அவரைக் காலி செய்தார் அவேஷ் கான்.

அதோடு பண்டாரா (2) ரன் அவுட்டிலும் அவேஷ் கானின் பங்கு இருந்தது. இலங்கை 13/2 என்று ஆனது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் அகமதுவும் அபாரமாக வீசினார். இலங்கை கேப்டன் அசலங்கா 6 ரன்களில் பாதம் என்பவரிடம் அவுட் ஆக இலங்கை 10-வது ஓவரில் 42/3 என்று சரிவு முகம் காட்டியது.

அப்போது இருகை பவுலிங் வீரர், ஆல்ரவுண்டர் காமிந்து மெண்டிஸ், ஆஷன் ஆகியோர் இணைந்து ஸ்கோரை தட்டுத் தடுமாறி 91 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். 67 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த காமிந்து மெண்டிஸ் தாகர் பந்தில் வெளியேறினார்.

அதன் பிறகு இலங்கை அணியில் ஆஷன் மட்டுமே 38 ரன்கள் எடுத்தார். பிவிஆர் டிசில்வா 28 ரன்களையும், பிஏ டிசில்வா 24 ரன்களையும் எடுத்தாலும் தேவைப்படும் ரன் விகிதம் எகிறிக் கொண்டிருக்க அவேஷ் கான் தனது 2-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். கடைசி 4 விக்கெட்டுகள் 21 ரன்களில் பெவிலியன் திரும்ப இலங்கை அணி 42.4 ஓவர்களில் 170 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது.

அவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், தாகர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இடையில் சில ரன் அவுட்கள், மிஸ்பீல்ட்கள், கேட்ச்கள் இந்திய அணியினரால் கோட்டை விடப்பட்டன, ஆனால் இதனை இலங்கை அணி பயன்படுத்திக் கொள்ளவில்லை, காரணம் வெற்றிக்குத் தேவையான ரன் விகிதம் எகிறிக் கொண்டேயிருந்ததே.

ஆட்ட நாயகனாக 72 ரன்கள் எடுத்த அன்மோல்பிரீத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x