பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து மிஸ்பா, வக்கார் யூனுஸ் திடீர் விலகல்: டி20 அணி அறிவித்தவுடன் முடிவு

பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் வக்கார் யூனுஸ், மிஸ்பா உல் ஹக் | கோப்புப் படம்.
பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் வக்கார் யூனுஸ், மிஸ்பா உல் ஹக் | கோப்புப் படம்.
Updated on
2 min read

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், பந்துவீச்சுப் பயிற்சியாளர் வக்கார் யூனுஸ் பதவி விலகினர்.

தங்களின் பதவி விலகல் முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இன்று காலை முறைப்படி அறிவித்துவிட்டுத் தங்கள் முடிவைத் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் உலகக்கோப்பை போட்டி தொடங்க இருக்கும் நிலையில், மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனுஸ் விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு நியூஸிலாந்து அணி வரும் 11-ம் தேதி பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 தொடரில் விளையாட உள்ளது. இதற்காக பாகிஸ்தான் அணி வரும் 8-ம் தேதி பயிற்சிக்காக இஸ்லாமாபாத்தில் கூட உள்ளது. இந்தத் தொடருக்கும் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கும், உலகக்கோப்பை போட்டிக்கும் பயிற்சியாளராக சக்லைன் முஷ்டாக்கையும், அப்துல் ரசாக்கையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடைக்காலமாக நியமித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் தலைமைப் பயிற்சியாளர்களாக மிஸ்பாவும், வக்கார் யூனுஸும் நியமிக்கப்பட்டனர். இருவரின் பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு காலம் இருக்கும்போதே விலகியுள்ளனர்.

மிஸ்பா உல் ஹக் வெளியிட்ட அறிக்கையில், “மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்குப் பின் நான் தனிமைப்படுத்திக் கொண்ட காலம். நான் கடந்த 24 மாதங்கள் கடினமாக உழைத்ததை நினைவுபடுத்தியது. அடுத்த சில மாதங்கள் என் குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன்.

பயோ-பபுள் சூழல் மேலும் என்னை அழுத்தத்தில் தள்ளும் என்பதால், பதவியிலிருந்து விலகுகிறேன். நான் பதவி விலகுவதற்கு இது சரியான நேரம் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், அடுத்துவரும் சவால்களைச் சந்திக்க என் மனது சரியான நிலையில் இருக்கிறது என நான் நினைக்கவில்லை. கடந்த 24 மாதங்களாக அணியைச் சிறந்த நிலையில் வழிநடத்தி இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன். என்னுடைய அணிக்கும் நிர்வாகத்துக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.


வக்கார் யூனுஸ் வெளியிட்ட அறிவிப்பில், “மிஸ்பா அவரின் முடிவை என்னிடம் பகிர்ந்துகொண்டு எதிர்காலத் திட்டம் குறித்து தெரிவித்தார். எனக்கும் அவர் எடுத்த முடிவு சரியானது. நானும் அவருடன் பயணிக்க முடிவு எடுத்ததால், நானும் பதவி விலகுகிறேன். இருவரும் ஒன்றாகவே பணியைத் தொடங்கினோம். ஒன்றாகவே விலகுகிறோம். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுடன் பணியாற்றியது, குறிப்பாக இளைஞர்களுடன் பணியாற்றியது எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது.

கடந்த 16 மாதங்களாக பயோ-பபுள் சூழல் எனக்குப் பெரிய பாதிப்பை மனதில் ஏற்படுத்தியது. இதுபோன்று நான் ஒருபோதும் உணர்ந்தது இல்லை. அடுத்த 8 மாதங்கள் பாகிஸ்தான் அணி பரபரப்பாக இயங்க இருக்கிறது. அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவேன். எனக்கு ஆதரவு அளித்த கிரிக்கெட் அணி நிர்வாகம், வாரியம், எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in