

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஓவல் டெஸ்ட்டில் சதம் அடித்ததன் மூலம், முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்டின் சாதனையை முறியடித்துள்ளார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இதில் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் அடித்து 126 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 7 சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா முதல் முறையாக வெளிநாட்டில் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகமான சதம் அடித்த இந்திய வீரர் எனும் பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் இங்கிலாந்து மண்ணில் 8 சதங்களைப் பதிவு செய்திருந்தார். அதை முறியடித்த ரோஹித் சர்மா 9-வது சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து மண்ணில் மட்டும் ரோஹித் சர்மா 9 சதங்களைப் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் அதிகமான சதங்களை அடித்த வரிசையில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட் மேன் 11 சதங்களைப் பதிவு செய்துள்ளார். அவரின் சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு இன்னும் இரு சதங்கள் தேவை.
இங்கிலாந்துக்குப் பயணம் செய்த அணிகளில் தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் டி20, டெஸ்ட், ஒருநாள் ஆகிய 3 பிரிவுகளிலும் சதம் அடித்த முதல் வீரர் ரோஹித் சர்மா என்பது பெருமைக்குரியதாகும். டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா நேற்று சதம் அடித்ததன் மூலம் 3 ஆயிரம் ரன்களையும் கடந்துள்ளார்.