பாராலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு 5 தங்கம்; பாட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்ணாவுக்கு மகுடம்

பாராலிம்பிக்ஸ் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் கிருஷ்ண நாகர் | படம் உதவி ட்விட்டர்
பாராலிம்பிக்ஸ் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் கிருஷ்ண நாகர் | படம் உதவி ட்விட்டர்
Updated on
2 min read

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான பாட்மிண்டன் (எஸ்ஹெச்6) பிரிவில் இந்தியவீரர் கிருஷ்ண நாகர் தங்கப் பதக்கத்தை வென்றார்.

டோக்கியோவில் கடந்த மாதம் தொடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டி இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான இன்று ஆடவருக்கான எஸ்எச்-6 பிரிவில் பாட்மிண்டனுக்கான இறுதி ஆட்டம் நடந்தது.

இதில் ஹாங்காங் வீரர் சூ மான் கியை எதிர்த்து களமிறங்கினார் இந்திய வீரர் கிருஷ்ண. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சூ மான் கியை 21-17, 16-21, 21-17 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார் இந்திய வீரர் கிருஷ்ண சாகர்.

முதல் செட்டில் சிறப்பாக ஆடிய கிருஷ்ண நாகர் 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். ஆனால், 2-வது செட்டில் சில தவறுகளைச் செய்ததால், 16 புள்ளிகள் மட்டுமே எடுத்து கிருஷ்ணா தவறவிட்டார்.

வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி செட்டில் தொடக்கத்திலிருந்தே கிருஷ்ண முன்னிலை வகித்து 7-1 என்ற கணக்கில் இருந்தார். ஆனால், ஹாங்காங் வீரர் கடும் போட்டியளித்து 6-7 என்ற புள்ளிக்கணக்கில் நெருக்கடி அளித்தார். அதன் சுதாரித்து ஆடிய கிருஷ்ண, 5 புள்ளிகள் முன்னிலையோடு சென்று 18-13 என்ற கணக்கில் இருந்தார். இறுதியில் 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

பாராலிம்பிக்ஸ் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இந்தியா வெல்லும் 4-வது பதக்கம் இதுவாகும். பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெல்லும் 5-வது தங்கம், மற்றும் பாட்மிண்டன் பிரிவி்ல வெல்லும் 2-வது தங்கம் இதுவாகும். இதற்கு முன் பிரமோத் பாகத் நேற்று எல்எல்3 பிரிவில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பாட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் பிரமோத் பாகத், பாலக் கோலி ஜோடி ஜப்பானின் புஜிஹாரா, சுகினோ ஜோடியை எதிர்கொண்டு விளையாடி வருகின்றனர்.

ஒருவேளை இதில் பிரமோத், கோலி பதக்கம் வென்றுவிட்டால். ஒரே பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஒரு பதக்கத்துக்கு அதிகமாகப் வென்ற 6-வது இந்தியர் எனும் பெருமையையும், 2 பதக்கங்களை டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வென்ற 2-வது இந்தியர் எனும் சிறப்பையும் பிரமோத் பெறுவார்.

இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in