Last Updated : 05 Sep, 2021 08:20 AM

 

Published : 05 Sep 2021 08:20 AM
Last Updated : 05 Sep 2021 08:20 AM

வெளிநாட்டில் ரோஹித் சர்மா முதல் சதம்: வலுவான நிலையில் இந்தியா: வெற்றி பெற கோலி படைக்கு நல்ல வாய்ப்பு?

ஓவல் டெஸ்டில் சதம் அடித்த மகிழ்ச்சியில் ரோஹித் சர்மா | படம் உதவி ட்விட்டர்

லண்டன்

ரோஹித் சர்மாவின் முத்தாய்ப்பான சதம், புஜாரா, ராகுலின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் வலுவான நிலையை எட்டியுள்ளது.

3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்து 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில் கேப்டன் விராட் கோலி 22 ரன்களுடனும், ஜடேஜா 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களும், இங்கிலாந்து அணி 290 ரன்களும் சேர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்த ஹிட்மேன் ரோஹித் சர்மா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 8-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து 127 ரன்களில்(14பவுண்டரி, ஒருசிக்ஸர்) ஆட்டமிழந்தார்.

கே.எல்.ராகுலுடன் சேர்ந்து 83 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்த ரோஹித் சர்மா, புஜாராவுடன் சேர்ந்து 2-வது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்து இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவினார்.
ரோஹித் சர்மாவுக்கு துணையாக ஆடிய புஜாரா 61 ரன்னிலும் கே.எல்.ராகுல் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ரோஹித் சர்மா கடந்த 8 ஆண்டுகளாக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதங்கள் அடித்திருந்தாலும் அதில் ஒரு சதம்கூட வெளிநாட்டில் அடித்தது இல்லை. ஆனால், முதல்முறையாக வெளிநாட்டில் ரோஹித் சர்மா சதத்தை பதிவு செய்துள்ளார். அதிலும் கடினமான ஆடுகளங்களைக் கொண்ட இங்கிலாந்தில் ரோஹித் சர்மா சதம் அடித்தது நிச்சயம் அவருக்கு மறக்கமுடியாத இனிய நினைவாக அமையும்.

ரோஹித் சர்மா இதுவரை அடித்த 8 சதங்களில் 3 சதங்களை நிறைவு செய்யும்போது சிக்ஸர் அடித்துதான் நிறைவு செய்தார். அதேபோன்று இந்த சதத்தையும் மொயின் அலி பந்தில் ஸ்ட்ரைட் லெக்கில் சிக்ஸர் அடித்து ரோஹித் சர்மா தனது சதத்தை நிறைவு செய்தார்.

அதிரடி ஆட்டத்துக்கும், களத்தில் நின்றுவிட்டால் காட்டடி அடிக்கும் ஹிட் மேன் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் நேற்று பெரிய முதிர்ச்சி காணப்பட்டது. மிகவும் நேர்த்தியாக, பொறுமையாக ஷாட்களை தேர்வு செய்து ஆடினார்.

எந்தவிதமான பெரிய தவறான ஷாட்களையும் ரோஹித் சர்மா ஆடவில்லை. இருமுறை ரோஹித் சர்மா ஆட்டமிழக்க ஸ்லிப்பில் வாய்ப்பு இருந்தபோதிலும் அதை ரோரி பர்ன்ஸ் கேட்சை நழுவவிட்டதால் அவர் தப்பித்தார். ரோஹித் சர்மாவுக்கு கேட்சை நழுவவிட்டதற்கு சரியான விலையை இங்கிலாந்து அணி கொடுத்து வருகிறது.

ஒரு கட்டத்தில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால், ராபின்ஸின் ஸ்லோ டெலிவரியில் புல் ஷாட் தூக்கி அடித்ததன் விளைவாக லாங்லெக்கில் வோக்ஸிடம் கேட்சாக அமைந்தது. புதிய பந்தில்தான் இந்திய வீரர்கள் விக்கெட்டை இழக்கிறார்கள் என ஏற்கெனவே கூறியதைப் போன்று இந்த முறை ரோஹித் சர்மாவும் புதிய பந்தில்தான் ஆட்டமிழந்தார்.

ராபின்ஸன் வீசிய பந்து இன்கட்டராக மாறி புஜாராவின் பேட்டில் பட்டு கால்காப்பில் பட்டு ஸ்லிப்பில் மொயின் அலியிடம் கேட்சாக மாறியது. இரு விக்கெட்டுகளுமே இங்கிலாந்து அணிக்கு திருப்புமுனையான விக்கெட்டுகளாகும்.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது 171 ரன்களுடன் வலுவான நிலையில் இருக்கிறது. இந்தியா ஆன்தி டிரைவர் சீட் என்று சொல்வார்கள் அதுபோன்று ஆட்டத்தின் கடிவாளம் இந்திய அணியின் கைகளுக்கு வந்துவிட்டது, இதை வெற்றியாக மாற்றுவது இன்று நாள்முழுவதும் பேட்டிங் செய்யும் இந்திய வீரர்கள் கைகளில் இருக்கிறது.

ஓவல் மைதானத்தைப் பொறுத்தவரை 225 ரன்கள் முதல்250 ரன்கள் வரை இங்கு கடைசி நாளில் சேஸிங் செய்வது சாதாரணமானதல்ல என்பது கடந்த கால வரலாற்றில் இருந்து தெரிய வருகிறது. ஆதலால், இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் இங்கிலாந்து அணிக்கு இலக்கு வைத்து பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்தால் ஓவல் மைதானத்தில் இந்திய அணிக்கு வெற்றி உறுதியாகும்.

அதிலும் சாதாரண வெற்றியாக இருக்காது, 50 ஆண்டுகளுக்குப்பின் ஓவல் மைதானத்தில் இந்திய அணிக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகமாறிவிடும். கடைசியாக 1971ம் ஆண்டுக்குப்பின் ஓவல் மைதானத்தில் இந்திய அணி வென்றதே இல்லை என்ற வரலாறு திருத்தி எழுதப்படும். இந்த வாய்ப்பை இந்திய அணியினர் தவறவிடாமல் பயன்படுத்துவார்கள் என நம்பலாம்.

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்திருந்தது. ரோஹித் சர்மா 20 ரன்களிலும், ராகுல் 22 ரன்களிலும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ராகுல் விரைவாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார், ராபின்ஸன் பந்தில் கவர் டிரைவில் சில பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசி ஸ்கோரை உயர்்த்தினார்.ஆனால் ஆன்டர்ஸன் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 46 ரன்னில் ராகுல் வெளியேறினார்.

அடுத்துவந்த புஜாரா, ரோஹித்துடன் சேர்ந்தார். வழக்கத்துக்கு மாறாக புஜாரா தேர்ந்தெடுத்து ஷாட்களை விளையாடத் தொடங்கி விண்டேஜ் புஜாராவாக மாறினார். புஜாராவின் சில ஷாட்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், கை தட்டலும் கிடைத்தது.

கடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் புஜாரா ஒரு ரன் எடுத்தவுடனே கைதட்டி அவரை கிண்டல் செய்த இங்கிலீஷ் ரசிகர்கள், இன்று புஜாராவின் ஒவ்வொரு ஷாட்டையும் ரசித்தனர். குறிப்பாக பேக் ஃபுட்டில் சென்று புஜாரா விளையாடும் ஷாட், லேட் கட் ஷாட், கவர் டிரைவ், ஆகிய ஷாட்களை அடித்தவுடன் ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

ரோஹித் சர்மா 145 பந்துகளில் அரைசதத்தையும், புஜாரா 103 பந்துகளில் அரைசதத்தையும் நிறைவு செய்தனர். 145 பந்துகளில் அரைசதம் அடித்த ரோஹித் சர்மா அடுத்த 59 பந்துகளில் அரைசதம் அடித்து சதத்தை நிறைவு செய்தார். அதாவது அரைசதம் அடித்தபின் ரோஹித் சர்மாவின் ரன்சேர்ப்பது வேகமெடுத்தது.

நிதானமாகஆடி வந்த ரோஹித் சர்மா 127 ரன்களில் ராபின்ஸன் பந்துவீச்சில் விக்ெகட்டை இழந்தார். அடுத்து சிறிது நேரத்தில் புஜாரா 61 ரன்னில் ராபின்ஸன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் கோலி, ஜடேஜா களத்தில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x