

குவாஹாட்டி மற்றும் ஷில்லாங்கில் நடைபெற்று வரும் 12வது தெற் காசிய விளையாட்டு போட்டியின் 4வது நாளான நேற்றும் இந்திய அணி பல்வேறு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது. நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் புதிய சாதனைகள் படைத்து ஒரே நாளில் 7 தங்கம் வென்றனர்.
பளுதூக்குதலில் 15 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 12 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று ஆதிக்கம் செலுத்தியது. ஆடவர் பிரிவில் 6 தங்கம், 1 வெள்ளி யும் மகளிர் பிரிவில் 6 தங்கமும் இந்தியாவுக்கு கிடைத்தது.
பளுதூக்குதல் பிரிவுகளில் நேற் றுடன் போட்டிகள் முடிவடைந்தன. கடைசி நாளில் இந்தியாவின் சுசீலா பன்வார் மகளிருக்கான 75 கிலோ எடை பிரிவில் மொத்தம் 198 கிலோ தூக்கி தங்கம் வென்றார். இலங்கைக்கு வெள்ளியும், நேபா ளத்துக்கு வெண்கலம் கிடைத்தது.
ஆடவருக்கான 105 கிலோ எடை பிரிவில் பாகிஸ்தானின் முகமது நூ தஸ்கிர் பட் தங்கம் வென்றார். இந்தியாவின் குர்தீப் சிங் வெள்ளியும், இலங்கையின் ஷமன் கீதரா வெண்கலமும் கைப்பற்றினர்.
சைக்கிளிங்
சைக்கிளிங் பந்தயத்திலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. நேற்று நடைபெற்ற மகளிருக்கான 80 கி.மீ. தனிபர் ‘ரோடு ரேஸ்' பிரிவில் இந்தியாவின் பித்யா லட்சுமி பந்தய தூரத்தை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் 55.350 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். சகநாட்டை சேர்ந்த லிடியாமோல் ஷன்னி, கீது ராஜ் ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கல பதக்கம் கைப்பற்றினர்.
ஆடவருக்கான 100 கி.மீ. தனிபர் பிரிவில் இந்தியாவின் பங்கஜ் குமார் வெள்ளி வென்றார். இந்த பிரிவில் இலங்கையின் ஜீவன் சில்வா தங்கமும், பாகிஸ்தானின் நிஷார் அகமது வெண்கலமும் வென்றனர்.
வில்வித்தை
வில்வித்தையில் இந்தியாவுக்கு நேற்று 5 தங்கம், 2 வெள்ளி பதக்கம் கிடைத்தது. ரிகர்வ் பிரிவின் கலப்பு ஜோடியில் இந்தியாவின் தீபிகா குமாரி, தருண்தீப் ராய் தங்கம் வென்றனர். இந்த ஜோடி 6-0 என்ற கணக்கில் வங்கதேச ஜோடியை தோற்கடித்தது.
மகளிருக்கான அணிகள் பிரி வில் இந்தியாவின் தீபிகா குமாரி, லட்சுமி ராணி மஜ்ஹி, பாம்பயாலா தேவி ஆகியோரை கொண்ட அணி 6-0 என இலங்கை அணியை வென் றது. ஆடவர் பிரிவில் தருண்தீப் ராய், குருசரண் பெஷ்ரா, ஜெயந்தா ஆகியோரை கொண்ட இந்திய அணி 5-1 என்ற கணக்கில் இலங்கை அணியை தோற்கடித்தது.
ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தருண்தீப் ராய் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான குருசரண் வெள்ளி பதக்கம் கைப்பற்றினார். மகளிர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி தங்கமும், பாம்பயாலா தேவி வெள்ளியும் வென்றனர்.
வூசூ போட்டியில் இந்தியா 3வது தங்க பதக்கத்தை கைப்பற்றியது. இந்தியாவின் ஷிராக் சர்மா 18.450 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.
நீச்சல்
நீச்சல் போட்டியில் ஆடவருக் கான 400 மீட்டர் பிரிஸ்டைல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சங்வேஹர் பந்தய தூரத்தை 3:58.84 விநாடி களில் கடந்து புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார். மகளிர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பந்தய தூரத்தை 4:30.08 விநாடி களில் கடந்து தங்கம் வென்றதுடன் புதிய சாதனையும் நிகழ்த்தினார்.
ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்தியாவின் ஷஜன் பிரகாஷ் பந்தய தூரத்தை 2:03.02 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார். மகளிருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்தியாவின் தாமினி கவுடா பந்தய தூரத்தை 2:21.12 விநாடிகளில் கடந்து சாதனை படைத்ததுடன் முதலிடம் பிடித்தார்.
ஆடவருக்கான 50 மீட்டர் பேக் ஸ்டிரோக் பிரிவில் இந்தியாவின் பி.எஸ்.மது பந்தய தூரத்தை 26.86 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து தங்க பதக்கம் கைப்பற்றினார். இதே பிரிவில் மகளிரில் இலங்கையின் கிமிகோ ரஹீம் தங்கம் வென்றார்.
4x200 மீட்டர் பிரிஸ்டைல் பிரி வில் ஆடவர் மற்றும் மகளிரில் இந் தியா தங்கம் வென்றது. ஆடவருக் கான 400 மீட்டர் பிரிஸ்டைல் பிரிவில் ஷஜன் பிரகாஷூம், மகளிர் பிரிவில் ஷிவானி ஹட்டாரியாவும் வெள்ளி வென்றனர். இதேபோல் ஆடவருக்கான 50 மீட்டர் பேக் ஸ்டிரோக் பிரிவில் அரவிந்தும், மகளிர் பிரிவில் மானா பட்டேலும் வெள்ளி பதக்கம் கைப்பற்றினர்.
குண்டு எறிதல்
மகளிருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் மன்பிரித் கவுர் தங்கம் வென்றார். சகநாட்டை சேர்ந்த மற் றொரு மன்பிரித் கவுர் வெள்ளியும் இலங்கையின் டபிள்யூ.டி.கே.பெர் னாண்டோ வெண்கலமும் வென்ற னர். மகளிருக்கான நீளம் தாண்டு தலில் இந்தியாவின் மயோஹா ஜானி தங்கமும், சகநாட்டை சேர்ந்த சாரதா பாஸ்கார் வெள்ளி பதக்கமும் வென்றனர். இலங்கையின் எஸ்.எல்.எஸ். சில்வா வெண்கலம் கைப்பற்றினார்.
தொடர்ந்து முதலிடம்
நேற்று மாலை நிலவரப்படி இந்தியா 74 தங்கம், 35 வெள்ளி, 10 வெண்கலத்துடன் மொத்தம் 119 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. இலங்கை 17 தங்கம், 36 வெள்ளி, 31 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் 5 தங்கம், 12 வெள்ளி, 20 வெண்கலத்துடன் மூன்றாவது இடத்திலும் இருந்தன.