பாராலிம்பிக்ஸ்: துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்களை வென்று அவானி லேஹரா புதிய வரலாறு

இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவானி லேஹரா | கோப்புப் படம்.
இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவானி லேஹரா | கோப்புப் படம்.
Updated on
1 min read

டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக்ஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் ஒரு தங்கம், வெண்கலம் என இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை அவானி லேஹரா பெற்றுள்ளார்.

டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் இந்திய வீராங்கனை அவானி லேஹரா பங்கேற்றார்.

19 வயதான அவானி லேஹரா தகுதிச்சுற்றில் 1,176 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இறுதிச் சுற்றில் அவானி லேஹரா 445.9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

சீன வீராங்கனை ஹாங் சியுபிங் 457.9 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஜெர்மன் வீராங்கனை நடாஷா ஹில்ட்ராப் 457.1 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார்.

இதற்கு முன் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்ஹெச்-1 பிரிவில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை எனும் பெருமையும் அவானி லேஹராவையே சேரும்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த அவானி லேஹராவுக்குக் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் அவரின் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. அதன்பின் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவின் வாழ்கை வரலாற்றைப் படித்தபின் அவானி, துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஜெய்பூரில் 2015-ம் ஆண்டு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாராலிம்பிக்ஸில் உலக சாதனையான 249.6 புள்ளிகளைப் பெற்று லேஹரா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் ஜோகிந்தர் சிங் கடந்த 1984-ம் ஆண்டில் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஒரு வெள்ளி, 2 வெண்கலத்தை வென்றிருந்ததுதான் சாதனையாக இருந்தது. ஜோகிந்தர் சிங் குண்டு எறிதலில் வெள்ளியும், வட்டு எறிதல், ஈட்டி எறிதலில் வெண்கலத்தையும் வென்றிருந்தார்.

இதுவரை பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in