பாராலிம்பிக்ஸ்: அறிமுகமே அசத்தல்; உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமாருக்கு வெள்ளி

இந்திய வீரர்  பிரவீன் குமார் | படம் உதவி ட்விட்டர்
இந்திய வீரர் பிரவீன் குமார் | படம் உதவி ட்விட்டர்
Updated on
2 min read


டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியி்ல் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் பிரவீன் குமார் தனது அறிமுகப் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை 11 ஆக உயர்ந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது, வரும் செப்டம்பர் 5-ம் தேதிவரை போட்டிகள் நடைபெற உள்ளன. ஆடவர் உயரம் தாண்டுதல் (டி64) பிரிவுக்கான போட்டிகள் இன்று நடந்தன. இந்தியா சார்பில் 18வயதான பிரிவின் குமார் பங்கேற்றார்.

பாராலிம்பிக்ஸ் போட்டியில் முதல்முறையாக பங்கேற்ற பிரவீன் குமார், 2.7மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். பிரி்ட்டனைச் சேர்ந்த ஜோனத்தன் ப்ரூம் எட்வர்ட்ஸ் 2.10 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தையும், போலந்து வீரர் மேக்ஜே லெபியாட்டோ 2.04 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதுவரை பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க வேட்டை இந்தமுறையாதான். இதற்கு முன் நியூயார்க்கில் நடந்த 1984 பாராலிம்பி்க்ஸில் 4 பதக்கமும், 2016ம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்ஸில் 4 பதக்கமும் இந்தியா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் பிரவீன் குமார் உலக பாரா தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் 2.05 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். 2019ம் ஆண்டு உலக ஜூனியர் பாரா தடகளப் போட்டியிலும் பிரவின் குமார் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் தகுதிச்சுற்றில் 4-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு பிரவீன் முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர் பிரவின் குமார் வெள்ளி வென்றது பெருமையளிக்கிறது. கடினமான உழைப்பு, ஈடுசெய்யமுடியாத அர்ப்பணிப்பால்தான் இந்த பதக்கம் கிடைத்துள்ளது. பிரவீன் குமாருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அவரின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in