

கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து தனது 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 505 ரன்கள் எடுத்து 135 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஒரு விதத்தில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவின் முன்னிலையைக் கடக்கவே இன்னும் 14 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மெக்கல்லம் தனது கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனதை அடுத்து நியூஸிலாந்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். கேன் வில்லியம்சன் 45 ரன்களுடனும் கோரி ஆண்டர்சன் 9 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய அணியில் ஜேம்ஸ் பேட்டின்சன் அபாரமாக வீசி இதுவரை 3 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.
முன்னதாக 363/4 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா 505 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரவுக்காவலன் நேதன் லயன் 33 ரன்கள் எடுத்து நியூஸிலாந்தை வெறுப்பேற்றினார், இவரும் ஆடம் வோஜஸும் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 81 ரன்கள் சேர்த்தனர்.
நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தனது பவுன்சர் உத்தியை தொடர்ந்து கடைபிடித்தார். ஜோ பர்ன்ஸ், ஸ்மித் ஆகியோரை வீழ்த்திய அதே முறையில் அபாய வீரர் ஆடம் வோஜஸையும் அவர் பவுன்சரில் வீழ்த்தினார். ஆடம் வோஜஸ் 60 ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா கடைசி 6 விக்கெட்டுகளை 67 ரன்களுக்கு இழந்து 505 ரன்கள் எடுத்தது. ஆனால் இந்தப் பிட்சில் இது ஒரு பெரிய ஸ்கோராகும்.
வாக்னர் 32.1 ஓவர்களில் 6 மெய்டன்களுடன் 106 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய நியூஸிலாந்து பேட்டின்சனின் அருமையான பந்து வீச்சுக்கு திணறியது. கப்தில் (0), பேட்டின்சன் பந்தில் எட்ஜ் எடுத்து அவுட் ஆனார். லேதம் 39 ரன்களில் பேட்டின்சனின் சற்றே அதிகமாக எழும்பிய பந்தை லெக் திசையில் நெவிலிடம் கேட்ச் கொடுத்தார்.
பந்துகள் ரிவர்ஸ் ஸ்விங்கும் ஆக, பேட்டின்சன், நிகோலஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார். மெக்கல்லம் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 25 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்தில் அவுட் ஆனார். மெக்கல்லமின் மட்டையிலிருந்து வந்த கடைசி டெஸ்ட் ஷாட்டை வார்னர் கேட்ச் பிடித்தார்.
வில்லியம்சன் 45 ரன்களுடனும், கோரி ஆண்டர்சன் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நாளை ஆட்டத்தின் 4-வது நாள், நியூஸிலாந்து குறைந்தது 200 ரன்களாவது முன்னிலை பெற்றால்தான் ஆஸ்திரேலியாவை ஏதாவது சிக்கலுக்குள்ளாக்க முடியும்.