

புணேயில் நடைபெற்ற ரஞ்சி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சவுராஷ்டிர அணியை இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 41-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது.
முதல் இன்னிங்சில் தவல் குல்கர்னியின் அபார பந்து வீச்சின் மூலம் சவுராஷ்டிராவை 235 ரன்களுக்கு சுருட்டிய மும்பை அணி, தனது முதல் இன்னிங்ஸில் ஸ்ரேயஸ் ஐயரின் அபாரமான அதிரடி 117 ரன்கள் மூலம் 371 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய சவுராஷ்டிரா 3-ம் நாளான இன்று 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
2-வது இன்னிங்ஸில் மும்பையின் வேகப்பந்து வீச்சாளர் தாக்கூர் 5 விக்கெட்டுகளையும், சாந்து, குல்கர்னி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஸ்ரேயஸ் ஐயர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
45 ரஞ்சி இறுதிப் போட்டிகளில் நுழைந்துள்ள மும்பை அணி 41-வது முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. இதில் 10 இன்னிங்ஸ் வெற்றிகள் அடங்கும். மும்பைக்கு அடுத்து கர்நாடகா 8 ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டத்துடன் தொலைதூர 2-வது இடத்தில் உள்ளது.
சவுராஷ்டிர அணியின் இந்திய வீரர் புஜாரா இந்த முக்கியமான இறுதிப் போட்டியில் 4 மற்றும் 27 என்று ஸ்கோர் செய்து ஏமாற்றமளித்தார்.
மாறாக மும்பையின் வளரும் நட்சத்திரம் ஸ்ரேயஸ் ஐயர் இந்த ரஞ்சி சீசனில் அதிகபட்சமாக 1,321 ரன்களை 73.28 என்ற சராசரியுடன் எடுத்து சாதனை புரிந்துள்ளார். இதில் 4 சதங்கள் 7 அரைசதங்கள் அடங்கும்.
ஆனால் சவுராஷ்டிர அணியின் சாதனை என்னவெனில் பிளேட் மட்டத்திலிருந்து ‘எலைட்’ மட்டத்திற்கு உயர்ந்து இறுதிப் போட்டி வரை வந்ததே.
41-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றதற்கு சச்சின் டெண்டுல்கர் மும்பை அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மும்பை அணி மீண்டும் எழுச்சியுற்றதற்கு சச்சினின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை மும்பை கேப்டன் ஆதித்ய தாரே ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார்.