

டோக்கியோவில் நடந்து வரும் 16-வது பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான பி1 ஏர்பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெண்கலப்பதக்கம் வென்றார்.
முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற சிங்ராஜ், அறிமுகத்திலேயே வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப்போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது, வரும் செப்டம்பர் 5-ம் தேதிவரை போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவருக்கான பி1 ஏர்பிஸ்டல் பிரிவுக்கான போட்டிகள் இன்று நடந்தன. இதில் 39வயதான இந்திய வீரர் சிங்ராஜ் அதானா 216.8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பெற்று வெண்கலம் வென்றார். முன்னதாக 8 பேருக்கான தகுதிச்சுற்றில் 6-வது இடத்தையும் சிங்ராஜ் பெற்றார்.
ஆனால், 575 புள்ளிகளுடன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற மணிஷ் அகர்வால் தகுதிச்சுற்றில் 7-வது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. நடப்பு சாம்பியன்களான சீனாவின் சாவோ யாங் 237.9 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தையும், ஹூவாங் ஜிங் 237.5 புள்ளிகளுடன் வெள்ளியையும் வென்றார்.
இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றுள்ளது.
ஹரியானா மாநிலம், பகதூர்கார்க் நகரைச் சேர்ந்த சிங்ராஜ், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் துப்பாக்கிச்சுடுதல்பிரிவில் சேர்ந்தார்.இதற்கு முன் பரிதாபாத்தில் உள்ள சைனிக் பள்ளியின் தலைவராகவும் சிங்ராஜ் இருந்துள்ளார்.
இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் அன் நகரில் நடந்த பாரா விளையாட்டு உலகக் கோப்பைப் போட்டியில் சிங்ராஜ் அதானா தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலம் வென்ற சிங்ராஜுக்குபிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்ட கருத்தில் “ சிங்ராஜ் அதானாவிடம் இருந்து அற்புதமான பங்களிப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் புத்திசாலித்தனமான துப்பாக்கிச்சுடுதல் வீரர் தேசத்துக்கு வெண்கலம் வென்று கொடுத்துள்ளார். கடினமாக உழைத்து, குறிப்பிடத்தகுந்த வெற்றியை அதானா பதிவு செய்துள்ளார். அதானாவின் சிறந்த எதிர்காலத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்
வெண்கலம் வென்ற சிங்கராஜ் காணொலியில் அளித்த பேட்டியில் “ இந்த பதக்கத்தை என்னுடைய பயிற்சியாளர்களுக்கும், குடும்பத்தாருக்கும் அர்ப்பணிக்கிறேன். என்னைச்சுற்றி பல நல்ல மனிதர்கள் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம். பிரம்மா, விஷ்நா, மகேஷ்வரன் போல் 3 பயிற்சியாளர்கள் உள்ளன. என்னை ஊக்கப்படுத்தினர்.
அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.பல்வேறு தவறுகளை கடந்து வருவதற்கு யோகா செய்ய பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர். நான் தினமும் 5 நிமிடங்கள் யோகா செய்தது எனக்கு உதவியது. என்னுடன் சிறந்த பயிற்சியாளர்கள் இருந்ததால் பதக்கம் வெல்ல முடிந்தது” எனத் தெரிவித்தார்.