

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வெறுள்ளார். மேலும் 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
F64 பிரிவில் களமிறங்கிய சுமித் அன்டில், தனக்கு மொத்தம் வழங்கப்பட்ட ஐந்து வாய்ப்புகளில், முதல் வாய்ப்பில் 66.95 மீட்டர் ஈட்டியை எறிந்தார். அவரே 5வது முயற்சியில் 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து புதிய உலக சாதனை படைத்தார்.
சக இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி இப்போட்டியில் 4வது இடத்தைப் பிடித்தார். 2வது இடத்தை ஆஸ்திரேலியாவின் மிச்செல் பூரியனும், மூன்றாவது இடத்தை இலங்கையின் துலன் கொடிதுவக்குவும் பிடித்தனர்.
முன்னதாக இன்று காலை மகளிர்க்கான 10 மீட்டர் ஏர் ரைபில்ஸ் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப்பதக்கம் வென்றார். ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்று இந்தியா பதக்கப்பட்டியலிலும் முன்னேறியுள்ளது.
பதக்கப் பட்டியலில் 2 தங்கம், 1 வெண்கலம், 4 வெள்ளிப் பதக்கங்களுடன் இந்தியா 25வது இடத்தில் உள்ளது. பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. பிரிட்டன் 2வது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
சுமித் அன்டிலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து:
பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், "டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா ஒளிர்கிறது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அன்டிலின் சாதனை வெற்றியால் தேசமே பெருமை கொள்கிறது. எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 5ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த முறை முன் எப்போது இல்லாத அளவுக்கு இந்தியா 117 வீரர்களை அனுப்பியுள்ளது.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான சுமித் அன்டில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த விபத்தில் இடது முழங்காலுக்குக் கீழ் உள்ள பகுதியை இழந்தார். அதன் பின்னர் அவருடைய முயற்சி இப்போது இமாலய வெற்றியை அளித்துள்ளது.