டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவானி தங்கம் வென்றார்

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவானி தங்கம் வென்றார்
Updated on
2 min read

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில், மகளிருக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவானி லெஹரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இது பாராலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதல் வரலாற்றில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற முதல் பெண்ணும் இவர்தான்.

அவானி 249.6 புள்ளிகள் எடுத்து உலகச் சாதனை படைத்துள்ளார். சீனாவின் க்யூபிங் ஜாங் 248.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், உக்ரைன் நாட்டின் இரினா 227.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

பிரதமர் மோடி வாழ்த்து:

அவானிக்கு வாழ்த்துத் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "அவானி, இது இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு சிறப்பான தருணம். நீங்கள் உங்களின் திறமையால், உழைப்பால், துப்பாக்கிச் சுடுதலில் கொண்ட ஈடுபாட்டால் தங்கம் வென்றுள்ளீர்கள். உங்களுடைய கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசுக்கும் எதிர்கால வெற்றிகளுக்கும் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

அவானிக்கு இந்திய பாராலிம்பிக்ஸ் கமிட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது. அதன் தலைவர் தீபக் மாலிக் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”பாரா சூட்டிங் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த அவானி லெஹராவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இளம் வீராங்கனையான அவர் உலகச் சாதனையை சமன் செய்து பதக்கத்தை வென்றுள்ளார்” எனக் கூறியிருக்கிறார்.

நேற்று மூன்று பதக்கங்கள்:

முன்னதாக நேற்று டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் யிங் ஜாவுடன் மோதினார். அவரிடம் தோல்வியைத் தழுவினாலும் கூட தேசத்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்தார்.

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் முதல் பதக்கமாக இது அமைந்தது. மேலும் பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற 2-வது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார் பவினா.இதற்கு முன்பு 2016-ல் ரியோ பாராலிம்பிக்ஸில் தீபா மாலிக், குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளியும், வட்டு எறிதலில் வினோத் குமார் வெண்கலமும் வென்றனர்.

இந்தியாவுக்கு 5வது பதக்கம்:

இன்று காலை அவானி துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற நிலையில், வட்டு எரிதலில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் பவினாபென் படேல், நிஷாத் குமார், வினோத் குமார், அவானி லெஹரா, யோகேஷ் கதூனியா என ஐந்து பேர் பத்தக்கங்களை வென்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in