அண்டர் 19 உலகக்கோப்பை: ரிஷப் பன்ட் அதிவேக அரைசத சாதனை; இந்தியா வெற்றி

அண்டர் 19 உலகக்கோப்பை: ரிஷப் பன்ட் அதிவேக அரைசத சாதனை; இந்தியா வெற்றி
Updated on
1 min read

டாக்காவில் இன்று நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேபாளத்துக்கு எதிராக இந்திய தொடக்க வீரர் ரிஷப் பன்ட் 18 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்திய அணி நேபாளத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் ரிஷப் பன்ட் 18 பந்துகளில் அரைசதமும் பிறகு 24 பந்துகளில் 78 ரன்கள் விளாசினார். இதில் 9 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் அடங்கும். இவர் மேலும் 22 ரன்களை சிங்கிளாகவே எடுத்திருந்தால் கூட 7 பந்துகள் குறைவாக அதிவேக சத சாதனைக்குரியவாகியிருப்பார். ஆனால் அவர் கடைசியில் தமங் என்பவர் பந்தை ஒதுங்கிக் கொண்டு அடிக்க முயற்சி செய்து பவுல்டு ஆனார்.

முதலில் நேபாள அணி 48 ஓவர்களில் 169 ரன்களுக்கு 8 விக்கெட் என்று முடிந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அண்டர்-19 அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இரு அணிகளும் ஏற்கெனவே காலிறுதிக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

170 ரன்கள் வெற்றி இலக்கத் துரத்திய களமிறங்கிய இந்திய அணி, ரிஷப் பன்ட், இஷான் கிஷண் மூலம் 9.1 ஓவர்களில் 124 ரன்கள் விளாசல் தொடக்கம் கண்டது.

ரிஷப் பன்ட் இன்று ஆக்ரோஷ மூடில் இருந்தார். முதல் பந்தே மிட்விக்கெட் பவுண்டரிக்குப் பறந்தது. டீப் ஸ்கொயர் லெக், லாங் ஆன் பவுண்டரியை குறிவைத்து ரிஷப் பன்ட் புல் ஷாட்களையும் லாஃப்டட் ஷாட்களையும் ஆடினார்.

52 ரன்களை 18 பந்துகளில் எடுத்து அண்டர்-19 கிரிக்கெட் அதிவேக அரைசதம் எடுத்ததோடு, அடுத்த 6 பந்துகளில் மேலும் மேலும் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசி 24 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் இஷான் கிஷண் 40 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் சர்பராஸ் கான் 21 ரன்களையும், அர்மான் ஜாஃபர் 12 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

முன்னதாக நேபாள் பேட்டிங்கின் போது மீண்டும் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் அசத்தி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அந்த அணியில் சுனார் மட்டுமே அதிகபட்சமாக 37 ரன்களை எடுத்தார். கடைசியில் தமங் 29 ரன்களை எடுத்ததினால் ஸ்கோர் 169 ரன்களை எட்டியது. ஆட்ட நாயகனாக பன்ட் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா பிரிவு டி-யில் டாப் அணியாக முடிவுற்று காலிறுதியை எதிர்கொள்ளவிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in