

தோனி செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்தாலே அவரிடம் உடனே ஓய்வு பற்றி கேட்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இந்த முறை கேட்டதற்கு தோனி, ஒரே கேள்வி எனது பதிலை மாற்றாது என்று பதிலடி கொடுத்தார்.
ஆசியக் கோப்பைத் தொடருக்காக வங்கதேசத்துக்கு அணி புறப்படும் முன்னர் நிருபர்கள் சந்திப்பில் தோனி கூறியதாவது:
“நான் ஒரு மாதம் அல்லது 15 நாட்களுக்கு முன்பு ஏதாவது கூறியிருந்தேன் என்றால் எனது பதில் ஒரு போதும் மாறாது. கேள்வி கேட்பவர் எந்த இடத்திலிருந்து இக்கேள்வியைக் கேட்டாலும் என் பதிலில் மாற்றமிருக்காது. அதாவது என் பெயர் என்னவென்று கேட்டால், தோனி என்பேன், அது போன்ற விஷயம் இது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இது நீடிக்கும், அதாவது நீங்கள் புதிய வடிவில் கேள்வியை வைக்கும் வரை.
கேள்விகள் இருக்கும். நீங்கள் எனக்கு கடிதம் எழுதுங்கள். உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது என்றாலும் அனைத்து வகையான கேள்விகளையும் கேட்பது சரியாகாது. என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டிய தேவை உள்ளது, அதை ஏன் செய்ய வேண்டும் என்று அனைத்தையும் மதிப்பிட வேண்டியது அவசியம். உங்களுக்குக் கேள்வி கேட்க ஒரு மேடை இருக்கிறது என்பதாலேயே கேட்ட கேள்வியையே நீங்கள் கேட்க வேண்டும் என்று பொருளல்ல.
அனைத்தும் ஊடகத்தினரின் போர்வைக்குள் வரும் உலகம் இது.
ஏதாவது நடந்தால் இந்தியாவில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உலகக்கோப்பை டி20-யை நம் அணி வென்றால், அணி வெகு விரைவில் உச்சத்திற்கு சென்று விட்டதோ என்று கேள்விகள் கேட்கப்படும். இறுதிப் போட்டியில் தோற்றுவிட்டால், இறுதிப் போட்டியில் கூடுதல் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியவில்லையா என்று கேட்கிறார்கள்.
சரி, தகுதியே பெறாவில்லையெனில், உள்நாட்டில் அழுத்தச் சூழ்நிலையை தாங்கும் திறன் அணியில் இல்லையோ என்கின்றனர். ஆனால் இந்த கேள்விகளை என்னால் நிறுத்த முடியாது என்று நான் நினைக்கவில்லை. இதை விட சிறந்த கேள்விகளை எழுப்பினால் நான் 100% பதிலளிப்பேன், இது உறுதி.
சமீபத்திய டி20 வெற்றிகள் பற்றி...
முதலில் வேறுபட்ட சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஆடினோம், பிறகு இலங்கைக்கு எதிராக இங்கு ஆடினோம். இதனால் அணி ஸ்திரமடைய கால அவகாசம் கிடைத்தது.
டி20யிலிருந்து டெஸ்ட் வடிவத்துக்கு மாறுவது சுலபம், ஆனால் டெஸ்ட்டிலிருந்து டி20-க்கு மாறுவது கொஞ்சம் கடினம். நிறைய போட்டிகளில் ஆடுவது எங்களுக்கு நன்மை. இதிலிருந்து சில விஷயங்களை எடுத்துச் செல்ல முடியும்.
பொதுவாக உலகக்கோப்பை டி20க்கு முன்னதாக அதிக போட்டிகள் கிடைக்காது. ஆகவே இப்போது சில போட்டிகள் கிடைத்திருப்பது வீரர்களுக்கு உதவவே செய்யும்.
ஆசியக் கோப்பையில் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு வழங்க முயற்சி செய்வோம். ஒரு ஸ்திரமான அணியாக ஆட இது உதவும். ஆனாலும் வெற்றி பெறுவதே எங்கள் முன்னுரிமை.
சூழ்நிலைமைகளும் பிற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அணிக்கு ஆடுவதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும்.
பெரிய போட்டித் தொடர்களை வெல்லும் நம்பிக்கையும் திறமையும் என்னிடம் உள்ளது. இந்த அணியிடம் அனைத்து திறமைகளும் உள்ளன. அனைவரும் உடற்தகுதியுடன் இருப்பது அவசியம். இந்த டி20 போட்டிகளில் பெரிய ஹிட்டர்களை விரைவில் வீழ்த்தி விட வேண்டும்.
தன் கேப்டன்சி பற்றி....
நான் 100 சதவீதம் அதே தோனிதான், மாற்றம் எதுவும் இல்லை. பார்வையிலும் உத்திகளிலும் மாற்றமில்லை, நிச்சயமாக அதேபாணிதான். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பதும் ஒரு பெரிய காரணிதான். அது டாஸாக இருக்கலாம். பனிப்பொழிவு இருக்கும் நேரத்தில் டாஸில் தோற்கிறோம் என்று வையுங்கள்.. அல்லது மழைவரும் ஆட்டங்களில் டாஸில் தோல்வி என்று வைத்துக் கொள்ளுங்கள்.. இவையெல்லாமும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. ஆனால் சாம்பியன்ஸ் லக் என்பது இருப்பதாக நான் கருதவில்லை. காசைச் சுண்டும் போது லக் என்பது உள்ளே வருகிறது.
தனது பேட்டிங் நிலை குறித்து...
சாதாரணமான சூழலில் நான் முன் கூட்டியே களமிறங்கத் தேவையில்லை. ஏனெனில் நம்மிடம் நல்ல பேட்டிங் உள்ளது. உதாரணமாக அனைவரும் நன்றாக ஆடி குறைந்த விக்கெட்டிலேயே 18,19 ஓவர்கள் வந்து விட்டால் அப்போது வேண்டுமானால் நான் மற்றவீரரக்ளுக்கு முன்பாக களமிறங்க வாய்ப்புள்ளது.
விராட் நம்பர் 3-ல் இருக்கிறார், பிறகு ரெய்னா, அடுத்து யுவராஜ், நான் 6-ம் நிலையில் இறங்குகிறேன், பிராகு ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா, ஆனால் மிடிலில் நல்ல பார்ட்னர்ஷிப் ஏற்பட்டால் புதிய முயற்சிகளில் நாங்கள் இறங்க வாய்ப்பிருக்கிறது.
மொகமது ஷமி ஒருவர்தான் எந்த நிலையிலும் நன்றாக வீசுவார், தொடக்கமாக இருந்தாலும் நடு ஓவர்களாக இருந்தாலும் கடைசி ஓவர்களாக இருந்தாலும். அவர் உடற்தகுதியுடன் இருந்தால் நம் அணியின் பந்து வீச்சு கொஞ்சம் கூடுதல் வலுவுடன் திகழும்.
மெக்கல்லம் உலக சாதனை பற்றி..
இந்த உலகசாதனை சதத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் அவரது பல இன்னிங்ஸ்களை பார்த்திருக்கிறேன். அவர் நிறைய ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறார். முதல் பந்திலிருந்தே நமக்கு உற்சாகமூட்டக் கூடியது அவரது பேட்டிங். அவருடன் ஓய்வறையைப் பகிர்ந்து கொள்வதை அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன்.
இவ்வாறு கூறினார் தோனி.
ஆசியக் கோப்பை டி20-யில் இந்தியா, வங்கதேசத்தை பிப்ரவரி 24-ம் தேதி எதிர்கொள்கிறது.