

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இறுதிச் சுற்றில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் பவினாபென் படேல்.
ஜப்பானின் டோக்கியோ நகரில்நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் நேற்று மகளிருக்கான டேபிள்டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவு அரை இறுதி சுற்றில் பவினாபென் படேல், சீனாவின் ஜாங் மியாவோவை எதிர்த்து விளையாடினார். இதில் 34 வயதான பவினாபென் படேல்,உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜாங் மியாவோவை 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் பவினாபென் படேல்.
இந்நிலையில், இன்று நடைபெறும் தங்கப் பதக்கத்துக்கான இறுதிச் சுற்றில் பவினாபென் படேல், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் யிங் ஜாவுடன் மோதினார். ஆரம்பம் முதலே சீன வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினார். இதனால், பவினா தனது உத்திகளை செயல்படுத்த முடியாமல் திறனினார். இருப்பினும் அவர் தளர்வடையாமல் தனது முயற்சியைத் தொடர்ந்தார். 7-11, 5-11, 6-11 என்ற செட் கணக்கில் அவர் சீன வீராங்கனையிடம் தோல்வியுற்றார். இருப்பினும் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் பவினாபென் படேல்
பிரதமர் வாழ்த்து:
இறுதிச் சுற்று வரை முன்னேறி வெள்ளி வென்றுள்ள பவினாபென் படேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துதெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "பவினாபடேல் வரலாறு படைத்துள்ளார். தாயகத்துக்கு அவர் வெள்ளிப் பதக்கத்தைக் கொண்டு வந்துள்ளார். வாழ்த்துகள். அவருடைய வாழ்க்கைப் பயணம் அத்தனை ஊக்குவிப்பதாக உள்ளது. அதனை அறிந்தால், நிறைய இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் தடம் பதிக்க புதிய உத்வேகம் பெறுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
படேல் 12 மாதக் குழந்தையாக இருக்கும்போது அவருக்கு போலியோ தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் அவரது பெற்றோர் அவரை சற்றும் தளர்வடையவிடாமல் ஊக்குவித்தனர். பவினாவும் பெற்றோர் வகுத்துக் கொடுத்த பாதையில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு இன்று சாதனைப் பெண்ணாக மிளிர்கிறார்.
தேசத்துக்கு அர்ப்பணிக்கிறேன்..
தனது வெற்றி குறித்து பவினாபென் படேல் கூறுகையில், ''இந்தப் பதக்கத்தை நான் என் தேசத்துக்கு அர்ப்பணிக்கிறேன். எனக்கு தொடர்ச்சியாக உறுதுணையாக இருந்த எனது பெற்றோர், பயிற்றுநர் மற்றும் நண்பர்களுக்கு நான் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறினார்.