

ஐபிஎல் 9-ம் தொடரில் புதிதாக சேர்ந்துள்ள ராஜ்கோட் அணியின் பெயர் குஜராத் லயன்ஸ். இந்த அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணிக்கு ஆஸ்திரேலிய வீரரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் பல்வேறு அணிகளுக்கு ஆடியவருமான பிராட் ஹாட்ஜ் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குஜராத் அணியில்தான் பிரெண்டன் மெக்கல்லம் இடம்பெற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகள் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ, இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர் ஆகியோரும் குஜராத் லயன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
வரும் 6-ம் தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. அணிக்கு 18 இந்திய வீரர்களும் 9 அயல்நாட்டு வீரர்களும் எடுத்துக் கொள்ள அனுமதியுள்ளது.
ஐபிஎல் தொடங்கிய காலத்திலிருந்து சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டியை ஆடாமல் விட்டதில்லை என்ற தனிச்சிறப்பான தகுதி பெற்றுள்ளார். மேலும் ஐபிஎல் லீகில் 132 ஆட்டங்களில் 3,699 ரன்களைக் குவித்து அதிக ரன்களை எடுத்த வீரராகத் திகழ்கிறார் ரெய்னா.