

இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் முதல் சுற்றில் வெற்றி கண்டு 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதேநேரத்தில் இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, முன்னணி வீரர்கள் ஸ்ரீகாந்த், காஷ்யப் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றவரான சாய்னா புதன்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் 21-15, 21-10 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் போர்ட்னிப்பை தோற்கடித்தார். போர்ட்னிப்புக்கு எதிராக சாய்னா பெற்ற 7-வது வெற்றி இது. சாய்னா அடுத்த சுற்றில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை சந்திக்கிறார்.
சர்வதேச தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 24-26, 17-21 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவருமான சீனாவின் இகன் வாங்கிடம் தோல்வி கண்டார்.
சர்வதேச தரவரிசையில் 20-வது இடத்தில் இருக்கும் காஷ்யப் 21-19, 8-21, 22-24 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் கெனிஷி டாகோவிடம் தோல்வி கண்டார். சீனாவின் சென் யூகுன் 21-12, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் காந்தை தோற்கடித்தார். காஷ்யப், காந்த் ஆகியோர் தொடர்ந்து 2-வது முறையாக முதல் சுற்றோடு வெளியேறியுள்ளனர். முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற ஜப்பான் ஓபனில் அவர்கள் இருவரும் முதல் சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.