Last Updated : 26 Aug, 2021 01:06 PM

 

Published : 26 Aug 2021 01:06 PM
Last Updated : 26 Aug 2021 01:06 PM

ஐபிஎல் 2021: ஆர்சிபி அணியில் இணையும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்

கோப்புப்படம்

பெங்களூரு

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த புதிய வேகப்பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே அணி வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டன.

முதல் சுற்று லீக் ஆட்டங்கள் மட்டுமே நடந்து முடிந்திருந்தன. இந்நிலையில் 2-வது சுற்று லீக் ஆட்டங்களையும், சூப்பர் லீக் மற்றும் இறுதி ஆட்டத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2-வது கட்ட ஐபிஎல் டி20 லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 27 நாட்கள் நடக்கும் போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன.

ஜார்ஜ் கார்டன்

ஒரே நாளில் இரு ஆட்டங்கள் 7 முறை நடக்கின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் முக்கிய அணியான கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் கானே ரிச்சர்ட்ஸன் 2-வது பகுதி தொடரில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, அவருக்கு பதிலாக இங்கிலாந்து இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜார்ஜ் கார்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆர்சிபி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “ஆர்சிபி அணி நிர்வாகம், இங்கிலாந்து இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜார்ஜ் கார்டனை ஐபிஎல் தொடரின் 2-வது பகுதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. கானே ரிச்சர்ட்ஸன் பங்கேற்காததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜார்ஜ் கார்டன் 38 டி20 போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரியாக 20.06 வைத்துள்ளார். பேட்டிங்கில் கார்டன் ஸ்ட்ரைக் ரேட் 124 வைத்துள்ளார்.

ஐபிஎல் 2-வது பகுதியில் ஆர்சிபி அணியில் மாற்றப்படும் 4-வது வீரர் கார்டன் ஆவார். பயிற்சியாளர் சைமன் கேடிச் விலகியதைத் தொடர்ந்து மைக் ஹெசன் தலைமைப் பயிற்சியாளராக மாற்றப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்ப்பாவுக்கு பதிலாக வனிடு ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் டேனியல் சாம்ஸுக்கு பதிலாக இலங்கை அணி வீரர் துஷ்மந்தா சமீராவும், பின் ஆலனுக்கு பதிலாக டிம் டேவிட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x