

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்று உணவு இடைவேளையின்போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் 3-வது விக்கெட் வீழ்ந்து விராட் கோலி பெவிலியன் திரும்பியவுடன் ரஹானே களமிறங்கினார். இவரும் ரோஹித் சர்மாவும் சேர்ந்து மிக நிதானமாக இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்தனர். கிட்டத்தட்ட 15 ஓவர்கள் இந்த இணை நிலைத்து, 35 ரன்களைச் சேர்த்தது.
சரியாக உணவு இடைவேளைக்குச் சில நிமிடங்களுக்கு முன்பு ராபின்ஸன் வீசிய பந்தில் ரஹானே 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 56 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் உள்ளது. இதுவரை வீழ்ந்த 4 விக்கெட்டுகளுமே விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் கேட்ச் பிடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் மதியத்துக்கு மேல் பந்து ஸ்விங் குறைந்து ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக மாறும் என்று நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். எனவே, பெரிய ஷாட்களை அடிக்காமல் குறைந்தபட்சம் விக்கெட் இழப்பின்றி இந்தியா ஆடுவதே பிரதானமாக இருந்தது. ஆனால், களத்தின் தன்மையை மிகத் திறமையாகத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள்.
முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். கடந்த போட்டியில் சதமடித்த கே.எல்.ராகுல் இம்முறை டக் அவுட் ஆகி வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய புஜாராவும் ஐந்தாவது ஓவரில் ஒரே ஒரு ரன் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விராட் கோலி வெறும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.