

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக முன்னாள் இலங்கை கேப்டன் மகேலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டதற்கு இலங்கை வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தும், இலங்கையும் ஒரே பிரிவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபாலா கூறும்போது, “மகேலா ஜெயவர்தனேயின் அறிவின் மீது நான் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் தற்போது ஒரே பிரிவில் இருக்கும் இன்னொரு அணிக்கு அவர் ஆலோசகர். ஓய்வு பெற்ற சில மாதங்களிலேயே உலகக்கோப்பையில் அவர் வேறு அணிக்கு ஆலோசகராகச் செல்வது வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
ஏதாவது ஒரு கிளப், மாகாண அல்லது ஐபிஎல் அணிக்கு ஆலோசகராகச் செல்லலாம். இது ஒரு உலகக்கோப்பை. இப்போதுதான் ஓய்வு பெற்று உடனேயே ஒரே பிரிவில் இருக்கும் இன்னொரு எதிரணியினருக்கு ஆலோசகராகச் செல்லலாமா?”
என்று கேள்வி எழுப்பினார்.
ஜெயவர்தனே பதிலடி:
இங்கிலாந்து அணியுடன் எனது ரோல் என்னவெனில் அந்த வீரர்களை மேம்படுத்துவது, மற்றும் பல்வேறு சவால்களைச் சந்திக்க அவர்களது அணுகுமுறையில் சில மாற்றங்களை புகுத்துவது, அதாவது ஸ்பின் பந்து வீச்சை ஆடுவது என்று வைத்துக் கொள்ளலாம்.
இந்த ஆலோசகர் பதவியை நான் ஏற்கும் போது உலகக்கோப்பை டி20 பிரிவுகள் அறிவிக்கப்படவில்லை. இலங்கை அணி பற்றிய தகவல்களை அளிக்க இங்கிலாந்து என்னை நியமிக்கவில்லை, அதற்காக அவர்களிடம் நிபுணர்களும் பயிற்சியாளர்களும் உள்ளனர்.
நான் ஓய்வு பெற்று குறிப்பாக டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் ஆகின்றன. சரி, நான் இலங்கை வீரர்கள் பற்றிய குறிப்பிட்ட தகவல்களையும், அந்த அணிக்கு எதிரான உத்திகளையும் சொல்லிக் கொடுக்கிறேன் என்று வைத்துக் கொண்டாலும் இன்னும் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக நான் இருக்கும் போது இருந்த அதே உத்திகளை அவர்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள் என்றால் அப்போது அதுதான் பிரச்சினை.
எனக்கு இலங்கை கிரிக்கெட் தான் இருதயபூர்வமானது, ஆனால் நானும் தொழில்பூர்வ வீரர்தான், மற்ற வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் வாய்ப்பு வந்தால் அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் சுமதிபாலா எனது அறம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது.
இவ்வாறு கூறினார் ஜெயவர்தனே.