முக்கியமானவர்களைப் பற்றித்தான் பேசுவார்கள்: விமர்சனங்கள் குறித்து ரஹானே கருத்து

முக்கியமானவர்களைப் பற்றித்தான் பேசுவார்கள்: விமர்சனங்கள் குறித்து ரஹானே கருத்து
Updated on
1 min read

டெஸ்ட் போட்டிகளில் தனது ஆட்டம் குறித்த தொடர் விமர்சனங்கள் பற்றிக் கவலையில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே கூறியுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் டிரா ஆனதைத் தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தத் தொடரில் புஜாரா மற்றும் ரஹானே என இரண்டு பேட்ஸ்மேன்களின் ஆட்டம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்துப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கும் ரஹானே, "மக்கள் என்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியே. முக்கியமானவர்களைப் பற்றித்தான் பேசுவார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால், விமர்சனங்கள் பற்றி எனக்குக் கவலையில்லை. அணிக்கு என்ன பங்காற்றுகிறேன் என்பதே முக்கியம்.

நானும் புஜாராவும் நீண்ட நாட்களாக ஆடி வருகிறோம். குறிப்பிட்ட சில சூழல்களில் அழுத்தத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். மற்றபடி எங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் குறித்து நாங்கள் நினைப்பதில்லை.

இரண்டாவது டெஸ்ட்டில் எனது ஆட்டம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. எனக்குப் பங்காற்றுதலில்தான் என்றும் நம்பிக்கை இருக்கிறது. அணியைப் பற்றித்தான் என்றும் சிந்திப்பேன். லார்ட்ஸில் அடித்த 61 ரன்கள் திருப்தியாக இருந்தது. நாங்கள் நிலைத்து ஆடியதுதான் முக்கியமானதாக இருந்தது. புஜாரா நிதானமாக ஆடுகிறார் என்றே எப்போதும் பேசுகிறோம். ஆனால், அவர் ஆட்டம் முக்கியமானது. 200 பந்துகளை அவர் எதிர்கொண்டார்.

சென்ற போட்டியின் வெற்றி விசேஷமானது. இப்போது அடுத்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். வெற்றியோ, தோல்வியோ நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்பது முக்கியம். எங்கள் அணி மீது நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து சிறப்பாகத்தான் ஆடி வருகிறோம்" என்று ரஹானே குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in