Published : 21 Aug 2021 07:00 AM
Last Updated : 21 Aug 2021 07:00 AM

பாராலிம்பிக்கில் இந்தியா 15 பதக்கம் வெல்லும்: இந்தியா செஃப் டி மிஷன் நம்பிக்கை

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா குறைந்தது 5 தங்கம் உட்பட 15 பதக்கங்கள் வெல்லும் என இந்தியா செஃப் டி மிஷன் குர்ஷரன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 24ம் தேதி பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து 54 பாரா தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், படகு போட்டி, துப்பாக்கிச்சுடுதல், நீச்சல், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ உள்ளிட்ட 9 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய குழுவுக்கு செஃப் டி மிஷனாகவும் உள்ள குர்ஷரன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டோக்கியோ பாராலிம்பிக்ஸ் எங்களது சிறப்பாக போட்டியாக இருக்கும் எனநான் நம்புகிறேன். எங்களது பாராதடகள வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக கடினமாக உழைத்து சர்வதேசபோட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்தி உள்ளனர். பாராலிம்பிக்ஸில் பங்கேற்க அவர்கள் துடிப்புடன் உள்ளனர். 5 தங்கம் உட்பட 15 பதக்கங்களை எதிர்பார்க்கிறோம். தடகளம், பாட்மிண்டன், துப்பாக்கிச்சுடுதல், வில்வித்தை ஆகியவற்றில் பதக்கம் வெல்வாம் என அதிக நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதவரை 11 பாராலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ள இந்தியா ஒட்டுமொத்தமாக 12 பதக்கங்கள் வென்றுள்ளது. இம்முறை உயரம் தாண்டுதலில் மாரியப்பன் 2வது முறையாக தங்கம் வெல்லக்கூடும் என கருதப்படுகிறது. 2016ம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு கடந்த 2017ம் ஆண்டு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதில் இருந்து குணமடைந்துள்ள மாரியப்பன், தேசிய அளவிலான வீரர்கள் தேர்வில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி அசத்தினார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாரியப்பனுடன் ஏற்கெனவே 2 முறை தங்கம் வென்ற ஈட்டி எறிதல் சாம்பியன் தேவேந்திர ஜஜாரியா (எஃப் 46), உலக சாம்பியன் சுந்தர் சிங் குர்ஜார், அஜீத் சிங் (எஃப் 46), சந்தீப் சவுத்ரி, நவ்தீப் சிங் (எஃப் 41) ஆகியோரும் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். மேலும் பாட்மிண்டனில் பிரமோத் பகத் (எஸ்எல் 3), கிருஷ்ணா நாகர் (எஸ்ஹெச் 6), தருண் திலான் (எஸ்எல் 4) ஆகியோரும் வில்வித்தையில் ராகேஷ் குமார்- ஷியாம் சுந்தர் (காம்பவுண்ட்), விவேக் ஷிகரா-ஹர்விந்தர் சிங் (ரீகர்வ்), ஜோதி பாலியன் (காம்பவுண்ட், கலப்பு பிரிவு) ஆகியோரும் பதக்கம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x