

கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் அணியின் வீர்ர்களுக்கு ஊக்கமளிக்க நம்பிக்கை அறிவுரையாளராக ஓய்வு பெற்ற அதிரடி வீரர் விரேந்திர சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கருடன் இணைந்து, வீரர்களை ஊக்குவிப்பதில் தன் பணியைச் செய்யவிருக்கிறார். மேலும் அணித்தேர்வு ஆகிய விவகாரங்களிலும் சேவாக் ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கிங்ஸ் லெவன் அணி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், “கிரிக்கெட் ஆட்டம் பற்றிய சேவாக்கின் அனுபவம் மற்றும் அறிவு ஒரு வலுவான அணியை உருவாக்க பெரிதும் பயன்படும். அனைத்து வீரர்களிடத்திலும் உள்ள சிறந்தவற்றை அவர் வெளிக்கொணர்வார்.
அணியின் சிறந்த நம்பிக்கை அறிவுரையாளராகவும் ஊக்குவிப்பாளராகவும் சேவாக் இருப்பது பெரிய பக்கபலமாகும்” என்றார்.
சேவாகும் பணியை ஏற்றுக் கொண்டு கூறும் போது, “கிங்ஸ் லெவன் அணியுடன் எனது பயணத்தை தொடர்வதில் மகிழ்ச்சி. எனக்கு இங்கு கிடைக்கும் ஆதரவு இந்த அணி நிர்வாகம் எனது குடும்பத்தின் நீட்சியாகவே எனக்கு தெரிகிறது. புதிய ஐபிஎல் தொடரை இந்தப் புதிய பணியுடன் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்றார்.