Published : 20 Aug 2021 04:31 PM
Last Updated : 20 Aug 2021 04:31 PM

மிகச்சிறந்த டெக்னிக்கல் பேட்ஸ்மேன், பந்துவீச சிரமப்பட்டது 3 வீரர்களுக்குத்தான்: மனம் திறக்கும் ஆலன் டொனால்ட்

தெந் ஆப்பிரிக்க வேகப்பந்துவச்சாளர் ஆலன் டொனால்ட் | படம் உதவி ட்விட்டர்

மும்பை

நான் சந்தித்ததிலேயே மிகச்சிறந்த டெக்னிக்கல் பேட்ஸ்மன், பந்துவீச சிரமப்பட்டு 3 வீரர்களுக்குத்தான் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் இருக்கும் நெருக்கத்தை அதன் புள்ளிவிவரங்கள் வாயிலாக அறியலாம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 1,161 ரன்களைக் குவித்து சராசரியாக 46 ரன்கள் வைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் 1,453 ரன்கள் சேர்த்து, 38 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.

சச்சினின் இந்த புள்ளிவிவரங்கள் வாயிலாக அந்நாட்டு மண்ணிலும் அந்த அணியின் பந்துவீச்சாளர்களை எவ்வாறு கதிகலங்க வைத்துள்ளார் என்பதை அறியலாம். சச்சினுக்கு பந்துவீசும் பந்துவீச்சாளர் அவரை விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிடுவது பந்துவீச்சாளருக்கு நல்லது, ஒருவேளை வாய்ப்புகளை பந்துவீச்சாளர் தவறவிட்டு, சச்சின் நிலைத்துவிட்டால், அது பேராபத்தில் முடியும்.

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டொனால்ட் தனது வாழ்க்கையில் பந்துவீச சிரமப்பட்ட 3 பேட்ஸ்மேன்கள் குறித்து யூடிப்பில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

நான் 3 பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசச் சிரமப்பட்டேன் என்று சந்தேகமில்லாமல் கூறுவேன். 3 பேட்ஸ்மேன்களும் 3 விதங்களில் நெருக்கடி கொடுப்பார்கள். டெக்னிக்கல் ரீதியாக சிறந்த பேட்ஸ்மேனான சச்சினுக்குத்தான் பந்துவீசுவது மிகக்கடினம். நான் சந்தித்த பேட்ஸ்மேன்களிலேயே பந்துவீசச் சிரமப்பட்ட முதல் பேட்மேன் சச்சின்தான்.ஏனென்றால், தென் ஆப்பிரிக்காவில் சச்சின் பேட்டிங் செய்ய பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் இந்தியஅணியில் வேறு யாரும் அப்போது பயன்படுத்தியதில்லை.

நாங்கள் வீசும் பந்துகளை தாமதமாகத்தான் விளையாடி, தாமதமாகவே பந்தை லீவ் செய்வார். சச்சின் கிரீஸில் ஒருமணிநேரம் நிலைத்து நின்று 20 அல்லது 30 ரன்கள்சேர்த்துவிட்டால், அது எதிரணிக்கு ஆபத்தாக முடியும், அன்று முழுவதும் சச்சின் பேட் செய்வார். டெக்னிக்கலாக பேட்செய்வதில் சச்சின்தான் நம்பர் ஒன்.

2-வதாக மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன் பிரையன் லாரா மிகச்சிறந்த பேட்ஸ்மேன். என்னைப் பொறுத்தவரை எந்த ஆடுகளமாக இருந்தாலும், பந்தை நிதானமாகக் கணித்து தடுத்து ஆடுவார். நான் சில போட்டிகளில்தான் லாராவுக்கு எதிராக விளையாடியிருக்கிறேன். லாராவை விரைவாக ஆட்டமிழக்கச் செய்யாவிட்டால் அவர் மிகவும் ஆவேசமாக ஆடத் தொடங்கிவிடுவார்.

லாராவின் சில ஷாட்களைப் பார்த்தால் சிரிப்பு வரும். வளைந்து நெளிந்து, பின்பக்கம் குதித்து லாரா பேட் செய்யும்போது சிரிப்பு வரும். நம்ப முடியாத வேகத்தில் கால்களையும், கைகளையும் நகர்த்தி ஆடக்கூடியவர் லாரா. லென்த்தின் பந்து பட்டு லெக்சைடில் ஒதுங்கினால் அது பவுண்டரியில்தான் இருக்கும். நான் சந்தித்த புத்திசாலியான பேட்ஸ்மேன் லாரா.

கடினமான மற்றும் எதிர்த்து நிற்கும் பேட்ஸ்மேன், பல நேரங்களில் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தியவர் ஸ்டீவ் வாஹ். மிகப்பெரிய வியப்புக்குரிய வகையில் ஸ்டீவ் வாஹ் ஏதும் பேட் செய்தது இல்லை. இதை நான் சொல்லும்போது ஸ்டீவ் என்னை மன்னிப்பார் என நம்புகிேறன். ஆனால் அணி இக்கட்டான நேரத்தில் சிக்கும் போது அதில் சிறப்பாக ஆடும் மன வலிமை கொண்டவர் ஸ்டீவ் வாஹ்

இவ்வாறு டொனால்ட் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x