ரஞ்சி உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் சீசன் ஆரம்பம்: அட்டவணை வெளியிட்டது பிசிசிஐ

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வரும் அக்டோபர் மாதத்தில் முஷ்டாக் அலி டி20 தொடரையும், 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரையும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், வீரர்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது தொற்று ஏற்பட வாய்ப்பு இருந்ததாலும் கடந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பைப் போட்டித்தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சீசனில் நடத்த பிசிசிஐ அமைப்பு முடிவு செய்து அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

''2022-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி முதல் மார்ச் 20-ம் தேதிவரை ரஞ்சிக் கோப்பைப் போட்டித் தொடர் நடக்க உள்ளது. இதில் வழக்கம் போல் 38 அணிகள் பங்கேற்கும்.

ஐபிஎல் டி20 தொடர் முடிந்தபின் சீனியர் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சயத் முஷ்டாக் அலிக் கோப்பைக்கான டி20 தொடர் வரும் அக்டோபர் 27-ம் தேதி தொடங்கும்.

ஒருநாள் போட்டிக்கான விஜய் ஹசாரே கோப்பைப் போட்டித் தொடர் 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கும். இதில் முதல் முறையாக சீனியர் மகளிருக்கான அணியும் பங்கேற்கிறது. இவர்களுக்கு அக்டோபர் 20-ம் தேதி முதல் நவம்பர் 20-ம் தேதிவரை போட்டிகள் நடக்கின்றன.

19 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிருக்கான வினு மன்கட் ஒருநாள் போட்டித் தொடர் வரும் செப்டம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான சேலஞ்சர் கோப்பை ஆடவருக்கு அக்டோபர் 25-ம் தேதியும், மகளிருக்கு அக்டோபர் 26-ம் தேதியும் தொடங்குகிறது.

25 வயதுக்கு உட்பட்டோருக்கான சி.கே.நாயுடு கோப்பைக்கான ஒருநாள் தொடர் நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது.

ரஞ்சிக் கோப்பை, விஜய் ஹசாரே, சயத் முஷ்டாக் அலி கோப்பை ஆகியவற்றில் பங்கேற்கும் 38 அணிகளும் 6 குரூப்களாகப் பிரிக்கப்படும். 5 எலைட் குரூப் கொண்ட 6 அணிகளும், 8 அணிகள் கொண்ட ஒரு குரூப்பும் இருக்கும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in