

லோதா கமிட்டியின் பரிந்துரை குறித்து விவாதிப்பதற்காக பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு மும்பையில் நேற்று கூடியது. இதில் லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு குறித்து லோதா கமிட்டி அளித்த பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக மார்ச் 3-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுபற்றி ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் லோதா கமிட்டியின் பரிந்துரை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. பிசிசிஐ சார்பில் செயலாளர் அனுராக் தாக்கூர் இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல பிசிசிஐ நிர்வாகக் குழுவை 9 உறுப்பினர்கள் கொண்ட உயர்நிலைக் குழுவாக மாற்றியமைக்க வேண்டும். அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்புக்கு தலைமைச் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும். பிசிசிஐயின் அன்றாட அலுவல்களை அந்தக் குழு கவனிக்க வேண்டும் என்று லோதா கமிட்டி பரிந்துரை செய்தது. அதன்படி தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அதிகாரி ஆகியோரைத் தேர்வு செய்யவும் பிசிசிஐ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டீஸ்கர் கிரிக்கெட் சங்கம் முழு உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளது. இதனால் சட்டீஸ்கர் அணி மத்திய மண்டல அணியில் ஓர் அங்கமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் ரஞ்சி கோப்பையில் அடுத்த ஆண்டு முதல் விளையாடும் தகுதியையும் அந்த அணி பெற்றுள்ளது. இதேபோல் பீகார் கிரிக்கெட் சங்கத்துக்கும் முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி-க்கு கோரிக்கை
மேலும் சமீபத்தில் ஐசிசி நிதி ஒதுக்கீடு விஷயத்தில் ஒரு சில திருத்தங்கள் மேற்கொண்டது. இதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பெறும் அதிக நிதி ஆதாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனை ஐசிசி தலைவராக உள்ள ஷசாங் மனோகர் மறுபரிசீலனை செய்ய பிசிசிஐ தரப்பில் வலியுறுத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
லோதா குழுவின் பரிந்துரைகள் என்ன? இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை சீரமைக்கும் விதமாக, ஒருவர் 3 முறைக்கு மேல் பிசிசிஐ நிர்வாகியாக இருக்கக்கூடாது. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது. அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பிசிசிஐ நிர்வாகிகளாக இருக்கக்கூடாது, வாரிய தேர்தல்களில் ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு தான் ஆகியவை லோதா குழு அளித்த பரிந்துரைகளில் முக்கியமானவை ஆகும். |