

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கிடைத்த வெற்றியோடு அடங்கிவிடமாட்டோம். இன்னும் 3 போட்டிகள் இருக்கின்றன என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெருமிதத்தோடு தெரிவித்தார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
2-வது இன்னிங்ஸில் 60 ஓவர்களில் 272 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 51.5 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்து 151 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களும், இங்கிலாந்து அணி 391 ரன்களும் சேர்த்தன. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 8 வி்க்கெட் இழப்புக்கு298 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. 272 ரன்கள் சேர்்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 120 ரன்களில் ஆட்டமிழந்து 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதற்கு முன் கடந்த 1986ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2014ம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் மட்டும் வென்றிருந்தது.
அதன்பின் 7 ஆண்டுகளுக்குப்பின் இப்போது கோலி தலைமையில் இந்திய அணி மீண்டும் வென்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு உதவிய கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்தியா தரப்பில் வெற்றிக்கு காரணமாக அமைந்த சிராஜ் 4 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஷமி ஒரு விக்ெகட்டையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியின் வெற்றிக்குப்பின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒட்டுமொத்த அணியையும் நினைத்து மிகப்பெருமை அடைகிறேன். நாங்கள் எங்கள் திட்டத்தை சரியாகச் செயல்படுத்தியுள்ளோம். பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். முதல் 3 நாட்கள் பேட்டிங்கிற்கு ஆடுகளம் ஒத்துழைக்கவில்லை. ஆனால், 2-வது இன்னிங்ஸில் நாங்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் விளையாடிய விதமும், பும்ரா, ஷமியின் பேட்டிங்கும் அற்புதமாக இருந்தது.
60 ஓவர்களில் நாம் வெற்றி பெற்றுவிடமுடியும் என்று நம்பித்தான் களமிறங்கினோம். எங்களுக்குள் இருந்த சிறிய பதற்றம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தது. அதிலும் புதிய பந்து எடுத்தபின் எங்களுக்கு திருப்புமுனையாக இருந்தது. நாங்கள் சிறந்த வெற்றியைப் பெறும்போதெல்லாம், கடைசிவரிசையில் உள்ள வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். அணியின் நம்பிக்கையும், விருப்பம்தான் வெற்றிக்கு இட்டுச்சென்றது.
கடந்த முறை லார்ட்ஸ் மைதானத்தில் இசாந்த் சர்மாவின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. இந்த முறை சிராஜின் பந்துவீச்சு ஆகச்சிறந்ததாக இருந்தது, அதிலும் முதல்முறையாக லார்ட்ஸ் மைதானத்தில் பந்துவீசிய சிராஜ் பிரமாதமாகச் செயல்பட்டார். நாங்கள் சிறப்பாக விளையாடுவதற்கு எங்களுக்கு ஆதரவு அளி்த்த ரசிகர்களும் காரணம். 75 ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாடும் இந்த வேளையில் சிறந்த வெற்றியை தேசத்துக்கு வழங்கியுள்ளோம் இன்னும் 3 போட்டிகள் உள்ளன. இந்த வெற்றியோடு மனநிறைவு அடைந்து அடங்கிவிடமாட்டோம்.
இவ்வாறு கோலி தெரிவித்தார்.