பெற்றோரை நினைத்துக் கவலைப்படும் ரஷித் கான்: ஐபிஎல் குறித்து சன்ரைசர்ஸ் அணி பதில்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் முகமது நபி, ரஷித் கான் | கோப்புப் படம்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் முகமது நபி, ரஷித் கான் | கோப்புப் படம்.
Updated on
2 min read

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் டி20 தொடரின் 2-வது பாதியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முகமது நபி, ரஷித் கான் இருவரும் பங்கேற்பார்களா என்பதற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நடந்த ஐபிஎல் டி20 தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மீதமுள்ள 37 ஆட்டங்களை ஐக்கிய அரசு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் நடத்த பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்தச் சூழலில், ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமாகி, பெரும்பாலான பகுதிகள் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன.

காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்தவுடன் அதிபர் அஷ்ரப் கானி, அங்கிருந்து தஜிகிஸ்தான் தப்பிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காபூலில் அதிபர் மாளிகையையும் தலிபான் தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ரஷித் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தற்போது ஆப்கானிஸ்தானில் இல்லை. பிரிட்டனில் 100 பந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

இதில் ரஷித் கான் டிரன்ட் ராக்கெட்ஸ் அணிக்காகவும், முகமது நபி லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்காவும் விளையாடி வருகின்றனர். இந்தத் தொடர் வரும் 21-ம் தேதி முடிந்தபின் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்களா அல்லது தாயகம் செல்வார்களா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி சண்முகம் அளித்த பேட்டியில், “ஐக்கிய அரபு அமீரக்கத்தில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முகமது நபி, ரஷித் கான் இருவரும் பங்கேற்பார்கள். இந்த மாதம் 31-ம் தேதி சன்ரைசர்ஸ் அணி ஐக்கிய அமீரகம் புறப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன், ஆப்கானிஸ்தான் நிலை குறித்து ரஷித் கானிடம் பேசியது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “நான் ரஷித் கானிடம் ஆப்கானிஸ்தான் நிலவரங்கள் குறித்துக் கேட்டேன். தங்கள் நாட்டின் நிலை குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த ரஷித் கான், தனது குடும்பத்தை அந்த நாட்டிலிருந்து வெளியே கொண்டுவர முடியாத நிலை குறித்து வேதனை அடைந்தார். காபூல் நகரிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரஷி்த் கானைப் பொறுத்தவரை இதுபோன்ற நெருக்கடியான, அழுத்தமான சூழலிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போதுள்ள சூழலை மறந்து விளையாடினால்தான் உங்களின் வழக்கமான ஆட்டத்தைத் தொடர முடியும் என்றேன். 100 பந்துகள் கிரிக்கெட்டிலேயே ரஷித் கான் கதை மிகவும் வேதனைக்குரியது” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in