Last Updated : 16 Aug, 2021 11:40 AM

 

Published : 16 Aug 2021 11:40 AM
Last Updated : 16 Aug 2021 11:40 AM

மீண்டும் தலிபான்கள் ஆட்சி: ஆப்கன் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் என்னாகும்?

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் வசம் சென்றுவிட்ட நிலையில் அந்நாட்டின் கிரிக்கெட் அணி நிலைமை, எதிர்காலம் என்னாகும் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியபின், தலிபான்கள் பெரும்பாலான மாகாணங்களைத் தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டனர். காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்தவுடன் அதிபர் அஷ்ரப் கானி, அங்கிருந்து தஜிகிஸ்தான் தப்பிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காபூலில் அதிபர் மாளிகையையும் தலிபான் தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டனர்.

தலிபான் தீவிரவாதிகள் பிடியில் ஆப்கானிஸ்தான் வந்துவிட்டதால் அங்குள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலைமை, எதிர்காலம் என்னாகும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் அடிப்படைவாதிகள், பழமைவாத சிந்தனைகள் நிரம்பிய தலிபான்கள் கிரிக்கெட் போன்ற விளையாட்டையும், பெண்களுக்கான உரிமைகளையும் இனிமேல் வழங்குவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தலிபான்களின் பிடியில் இதற்கு முன் ஆப்கானிஸ்தான் இருந்தபோது, பெண்களுக்கான உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டு, குழந்தை பெற்றுத்தரும் எந்திரங்களாக மட்டுமே நடத்தப்பட்டார்கள். பல விளையாட்டுகள் தடை செய்யப்பட்டிருந்தன.

ஆனால், வரலாற்றைப் பார்த்தால், ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் கடந்த 1839-ம் ஆண்டிலேயே காபூல் நகரில் கிரிக்கெட் விளையாடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் எல்லையை ஆப்கானிஸ்தான் பகிர்ந்துள்ளதால், இங்குள்ள அகதிகள் பாகிஸ்தானில் இருந்தபோது, அவர்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டு மிகப் பிரபலமாக இருந்துள்ளது.

இதையடுத்து, தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கன் இருந்தபோதே கடந்த 1995-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அமைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அகதிகள் தாய்நாட்டுக்குத் திரும்பியபோதிலும் கிரிக்கெட் விளையாடினர். தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாடவும் தடை விதித்த தலிபான் தீவிரவாதிகள், காலப்போக்கில் கிரிக்கெட்டுக்கு மட்டும் விலக்கு அளித்து மற்ற விளையாட்டுகளுக்குத் தடையை நீட்டித்தனர்.

2000-ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஒரே விளையாட்டு கிரிக்கெட்டாக மட்டும்தான் இருந்தது. இதைத் தொடர்ந்து ஐசிசி சார்பில் ஆப்கானிஸ்தானை உறுப்பினராக கடந்த 2001-ம் ஆண்டு ஏற்று, 2013்-ம் ஆண்டு துணை உறுப்பினராகவும், 2017-ம் ஆண்டு நிரந்தர உறுப்பினராக்கவும் மாற்றியது.

2001-ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தான் நாடு கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இருந்த கிரிக்கெட் ஆர்வத்தைப் பாரத்த தலிபான்கள், பாகிஸ்தான் அரசிடம் பேசி, ஐசிசி உறுப்பினராக உதவுமாறு கோரினார்கள். அதன்பின் 2003, 2004, ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு பயணம் செய்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது.

2004-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் போட்டியில் ஆப்கானிஸ்தான் பங்கேற்றது. அதன்பின் படிப்படியாக ஒருநாள் அந்தஸ்து, டி20, டெஸ்ட் போட்டி அந்தஸ்து ஐசிசி சார்பில் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டுதான் ஆப்கன் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது.

ஐசிசி டி20 தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான், டெஸ்ட், ஒருநாள் தர வரிசையில் 10-வது இடத்தில் உள்ளனர்.

ஆனால், தற்போது தலிபான்கள் ஆக்கிரமிப்பில் ஆப்கானிஸ்தானில் உள்ள 6 மைதானங்களையும் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். குறிப்பாக காந்தகார் சர்வதேச கிரிக்கெட் மைதானம், குந்துஸ் கிரிக்கெட் மைதானம், கோஸ்ட் சிட்டி மைதானம் ஆகியவை தலிபான்கள் வசம் சென்றுவிட்டன.

மஸார் இ ஷெரீப் நகரில் அமைந்துள்ள பால்க் கிரிக்கெட் மைதானத்தைக் கைப்பற்ற தலிபான்கள், அரசுப்ப டைகள் இடையே சண்டை நடந்து வருகிறது. காபூல் கிரிக்கெட் மைதானம் மூடப்பட்டுள்ளது, ஜலலாபாத் நகரில் உள்ள காஜி அமானுல்லா சர்வதேச மைதானம், ஆப்கன் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இப்படி மைதானங்கள் அனைத்தும் தலிபான்கள் வசம் வந்துவிட்டதால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் டி20 உலகக் கோப்பைக்குப் பயிற்சியில் எவ்வாறு ஈடுபடப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தலிபான் பிடியில் மைதானங்கள் இருப்பதால், வீரர்களைப் பயிற்சியில் ஈடுபட அனுமதிப்பார்களா, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்குமா, அல்லது ஆப்கன் அணியினர் அனைவரும் மொத்தமாக வெளியேறி வேறு நாட்டில் பயிற்சியில் ஈடுபடுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தலிபான்கள் கைகளில் ஆப்கானிஸ்தான் ஆட்சி சென்றாலும் கிரிக்கெட் மீது எப்போதும் கரிசனமாகவே தலிபான்கள் இருந்துள்ளார்கள். ஆதலால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் எதிர்காலம் கருகிவிடாது என்று நம்பலாம்.

அதற்குச் சிறிய சம்பவத்தை உதாரணமாகவும் குறிப்பிடலாம். கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாகத் தகுதி பெற்றுவிட்டது. இந்தச் செய்தியைக் கேட்டதும் தலிபான்கள் கூட குஷியாகிவிட்டார்கள்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நூர் முகமது கூறுகையில், “ஆப்கானிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக தலிபான்களும், நாங்களும் சுட்டுக்கொண்டோம், ஒருவர் மீது ஒருவர் அல்ல. வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டோம். ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றதைக் கொண்டாடினோம். தலிபான்கள் எங்கெல்லாம் வலிமையாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் கிரிக்கெட்டும் வலிமையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

அப்போதைய கேப்டன் முகமது நபி கூட ஒரு பேட்டியில் கூறுகையில், “நாங்கள் காபூல் நகரம் வந்து சேர்ந்ததும் எங்கு பார்த்தாலும் எங்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டு, ஆப்கன் கொடி உயர்த்தப்பட்டது. ஒவ்வொருவரும் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஆப்கானிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷத்தையே கேட்க முடிந்தது. எங்கள் ஆதரவாளர்களால் விமான நிலையம், சாலைகள் எனக் கூட்டம் நிரம்பியதால், அரசுக்குப் பாதுகாப்புப் பிரச்சினையும், போக்குவரத்துநெரிசலும் ஏற்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆதலால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் கருகிவிடாது என்று நம்பலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x