Last Updated : 14 Aug, 2021 09:03 AM

 

Published : 14 Aug 2021 09:03 AM
Last Updated : 14 Aug 2021 09:03 AM

 இந்தியக் கிரிக்கெட் வேண்டாம்: 28 வயதில் ஓய்வு பெற்ற உலகக் கோப்பையை வென்ற கேப்டன்

உன்முக் சந்த் | படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி


2012ம் ஆண்டு 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைைய வென்று கொடுத்த இந்திய அணியின் கேப்டனாக இருந்த உன்முக் சந்த் இந்தியக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பிசிசிஐ அமைப்பின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள உன்முக் சந்த், அமெரிக்காவில் உள்ள லீக் தொடர்களிலும், பல்வேறு நாடுகளில் நடக்கும் தொடர்களிலும் விளையாடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர்தான் உன்முக் சந்த். அந்த தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அற்புதமான ஒரு சதமடித்து உலகக் கோப்பையை இந்தியாவிற்காக கைப்பற்றி கொடுத்தார்.

அப்போது அனைத்து ஊடகங்களும் இந்திய அணிக்கு அடுத்த விராட் கோலி கிடைத்துவிட்டார் என்றெல்லாம் உன்முக் சந்த்தை பாரட்டி எழுதி புகழ்ந்தன. ஆனால் அப்படிப்பட்ட வீரர், இந்தியாவில் தன்னுடைய திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைக்காததால் தற்போது அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாட சென்றுவிட்டார்.

அவருடன் 2012 இந்திய அணியில் விளையாடிய சந்தீப் ஷர்மா ஐபிஎல் தொடரிலும், ஹனுமா விஹாரி இந்திய டெஸ்ட் அணியிலும் விளையாடி வரும் சூழ்நிலையில், இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு உலகக் கோப்பையை பெற்று தந்த உன்முக் சந்த், அமெரிக்காவிற்காக கிரிக்கெட் விளையாட சென்றது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

2012ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய உன்முக் சாந்திற்கு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் கிைடத்தும் போதிய வாய்ப்புக் கிடைக்காமல் இருந்தார். இந்திய ஏ அணிக்கு பலகாலமாக கேப்டனாக செயல்பட்டபோதிலும் இந்திய அணியில் உன்முக் சந்திக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களான ஸ்மித் பட்டேல், ஹர்மீத் சிங் ஆகியோர் ஏற்கனவே அமெரிக்க அணிக்காக விளையாட அங்கு சென்றுவிட்டனர். இவர்களை எல்லாம் பாகிஸ்தான் அணிக்காக ஓப்பனிங் ஆடிய வீரரான சமி அஸ்லாம் என்பவர் தான் ஒருங்கினைத்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2021ம் ஆண்டு சீசனில் சிலிக்கான் வேலி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக உன்முக் சந்த் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இன்று நடக்கும் ஆட்டத்தில் சோசியல் லாஷிங்ஸ் அணிக்காக உன் முக்சந்த் களமிறங்குகிறார்.

அமெரிக்காவில்அடுத்த தலைமுறையினருக்கான கிரிக்ெகட்டை வளர்க்கும் முயற்சியில் அந்நாடு ஈடுபட்டு வருகிறது.இதைப் புரிந்துகொண்ட உன்முக் சந்த், அமெரிக்காவின் சான் பிரான்சிக்ஸோ நகரின் பே ஏரியா பகுதிக்கு குடிபெயர்ந்தார். பல ஆண்டுகள் லீக் போட்டியில் விளையாடுவதற்கான ஒப்பந்தங்களை உன்முக் சந்த் செய்துள்ளார்.

உன்முக் சந்த் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ எனக்கு எவ்வாறு உணர்வது என எனக்குத் தெரியவி்ல்லை. இனிமேல் என்னால் தாய்நாட்டுக்கு விளையாட முடியாது, என்பதால், இதயத்துடிப்பு நின்றுவிட்டது.

இந்தியாவில் நான் விளையாடிய காலத்தில் மறக்கமுடியாத சில நினைவுகள் உள்ளன. குறிப்பாக 19வயதினருக்கான உலகக் கோப்பையை வென்று வாழ்வில் சிறந்த தருணம். கேப்டனா உலகக் கோப்பையை ஏந்துவது சிறப்பானது, உலகளவில் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கினோம்.

அந்த உணர்ச்சியை, மகிழ்ச்சியை என்னால் மறக்க முடியாது. இந்திய ஏ அணி்க்கு கேப்டனாக இருந்த காலத்தையும், பல வெற்றிகள் பெற்றதும் நினைவில் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

67 முதல்தரப் போட்டிகளில் விளையாடிய உன்முக் சந்த் 3,379 ரன்கள் குவித்துள்ளார். ஏ தரக் கிரி்க்கெட்டில் 120 போட்டிகளில் 4,505 ரன்களும், 77 டி20 போட்டிகளில் 1,565 ரன்களும் சேர்த்துள்ளார்.

டெல்லியில் படித்துக்கொண்டிருந்த உன்முக் சந்த், பள்ளி மாணவராக இருந்தபோதே டெல்லி அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடியவர்.தனது 4வது ஆட்டத்திலேயே உன்முக் சந்த் சதம் அடித்தார்.
2016-ம் ஆண்டு விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் அணியிலிருந்து உன்முக் சந்த் நீக்கப்பட்டார், ஐபிஎல் தொடரிலும் எந்த அணியும் விலைக்கு வாங்கவில்லை என்பதால், உன்முக் சந்த் ஓரம்கட்டப்பட்டார்.

இந்தியாவில் தன்னுடைய திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைக்காததால் தற்போது அமெரிக்க கிரிக்கெட்டிற்கு விளையாடப்போகும் முடிவை எடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x